கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு நிலையால், பள்ளியில் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே தரமான கல்வியை வழங்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வீட்டில் இருந்து பாடங்களைக் கற்பதற்கான பொருத்தமான வழிகாட்டு நெறிமுறையையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
கல்வித்தொலைக்காட்சி (யூ டியுப் சேனல்), TNSCERT டியுப் சேனல் , TN Schools Workplace போன்றவைகளை ஆசிரியர்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.
தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை, தனியார் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், தொலைக்காட்சி நிகழ்ச்சி, வாட்ஸ்அப் குரூப், வீட்டுப் பாடங்களின் மூலம் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடை நடைமுறைப்படுத்துவது இயலாத காரியம் என்று ஆசிரியர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மாணவர்களின் தற்போதைய மனிநிலை குறித்து கருத்து தெரிவித்தார் மூத்த ஆசிரியர் ஒருவர், " ஒரு மாணவனின் அறிவுசார்களம், உடலியக்க சார்களம் மற்றும் உணர்ச்சி சார்களம் போன்றவைகளை மேம்படுத்தி அவனது ஒட்டு மொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு செய்யப்படுகிறது (Continuous and Comprehensive Evaluation) . தற்போதைய சூழலில், மாணவர்களிடம் சிந்தனை சார்ந்த தொடர் செயல்பாடுகளை ஊக்குவித்தல் கடினமான ஒன்று . உண்மையில், பெரும்பாலான மாணவர்களுக்கு வாட்ஸ்அப் குரூப் மற்றும் தொலைக் காட்சி நிகழ்சிகள் போன்ற வற்றில் பெரிய ஆர்வம் இருப்பதாய் தெரியவில்லை. இன்னும் பள்ளி விடுமுறை நாட்களில் இருப்பதாகவே உணர்கின்றனர். இதனால், மாணவர்களின் கற்றல் குறைபாடுகளை கண்டறிந்து, அதற்கு ஏற்றவாறு கற்பித்தலை மாற்றி அமைக்கும் வாய்ப்பும் ஆசிரியர்களுக்கு இல்லாதல் சூழல் உள்ளது" என்று தெரிவித்தார்.