தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் மாதம் 15ம் தேதி துவங்கும் என்றும் இதற்கான புதிய அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்த தேர்வு, ஜூன் 1ம் தேதி முதல் துவங்கப்படுவதாக இருந்தது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
கொரோனா பரவல் தடுப்பு காரணமாக தேசிய அளவிலான ஊரடங்கு கடந்த மார்ச் 24ம் முதல் அமல்படுத்தப்பட்டது. அதற்கு பிறகு 4 முறை நீட்டிக்கப்பட்டு தற்போது மே 31 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ம் தேதி நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்தன. இதனை தொடர்ந்து தேர்வு தொடர்பாக முதல்வர் பழனிசாமி உடன் பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
முதல்வர் உடனான ஆலோசனைக்குப்பிறகு அமைச்சர் செங்கோட்டையன் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய அட்டவணையை வெளியிட்டார்.
பின்னர் அவர் பேசியதாவது, ஜூன் 1ல் துவங்கவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வு 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. முதல்வருடன் நடந்த ஆலோசனைக்கு பிறகு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. ஜூன் 15 முதல் 25 வரை தேர்வு நடக்கும். பல தரப்பிலும் இருந்து வந்த வேண்டுகோளை ஏற்று தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொது தேர்வு ஏற்பாடுகள் திட்டமிட்டபடி நடக்கிறது. பத்தாம் வகுப்பு தேர்வுக்காக 15,690 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுத அனுமதி வழங்கப்படும். மாணவர்களின் வசதிக்காக, அவர்கள் படிக்கும் பள்ளியின் 5 கி.மீ., சுற்றளவுக்குள் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil