தமிழகத்தில் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு நிறைவடைந்துள்ள நிலையில், தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியாகும் என பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வினை 7 ஆயிரத்து 518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் 145 பேர் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவர்கள் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட விடைத்தாள் திருத்தும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருத்துதல் பணிகளில் சுமார் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உட்பட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விடைத்தாள் திருத்தும் பணியில் கடந்த ஆண்டுகளில் நடைபெற்றது போன்ற தவறுகள் ஏற்படாத வகையில் திருத்தும் பணிகள் நடைபெற வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.