கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு வருகின்ற ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியாகிறது.
இதுதொடர்பாக மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கே.நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
கூட்டுறவு வங்கிகள், அனைத்து வகையான மத்திய, தொடக்க கூட்டுறவு சங்கங்களில் (பணியாளர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டக சாலைகள் தவிர) நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட வேண்டிய உதவியாளர் காலி பணியிடங்களை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம் தேர்வு செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிய பிறகே, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அந்த வகையில், கீழ்க்கண்ட காலவரையறையை பின்பற்றி பணி நியமன பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் வாயிலாக நாளிதழ்களில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி பணி நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு, ஆகஸ்ட் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பெற வேண்டும்.
அவற்றை பரிசீலித்து, தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி ஹால் டிக்கெட் வழங்க வேண்டும். செப்டம்பர் 12 ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்று, அக்டோபர் 27 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். நவம்பர் 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை நேர்காணல் நடத்தி, இறுதி முடிவுகளை நவம்பர் 15 ஆம் தேதி வெளியிட வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.