/indian-express-tamil/media/media_files/gxVQQvUvnoJAbHiRujJk.jpg)
பள்ளிகளில் செயல்படும் பயிற்சி மையங்களுக்கு தடை விதிக்க வேண்டும் அல்லது குழு அமைத்து வரையறை செய்ய வேண்டும் என மாநிலக் கல்விக் கொள்கை குழு தனது பரிந்துரை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கை 2020-க்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும் இதற்கு மாற்றாக தமிழகத்திற்கு என பிரத்யேக கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு 2022-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பல்வேறு தரப்பின் கருத்துகள் கேட்டறிந்து சுமார் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2023 அக்டோபரில் தயார் செய்தனர்.
பின்னர் 10 மாதங்கள் கழித்து நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் மாநிலக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தனர். அதில் தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், 9 ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வு கிடையாது, கல்லூரிகளில் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது, 12 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த வேண்டும், நீட் விலக்கு என்பன உட்பட பல்வேறு பரிந்துரைகள் இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கை மீது அனைத்து தரப்பின் கருத்துகள் கேட்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் ஓராண்டாகியும் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடை செய்ய வேண்டுமென மாநிலக் கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது, பள்ளிகளில் இயங்கும் பயிற்சி மையங்கள், பாடத்திட்டங்களை முழுமையாக முடிக்காமலேயே நுழைவுத் தேர்விற்கு மட்டும் பயிற்சி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், பள்ளிகள் உள்ளேயே நடைபெறும் பயிற்சி மையங்கள் அல்லது பள்ளிகளுடன் இணைப்பு பெற்று நடத்தப்படும் பயிற்சி மையங்கள் பாடத்திட்டத்தைக் காட்டிலும் மாணவர்களுக்கு நுழைவு தேர்விலேயே அதிக கவனம் செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இதுபோன்று இயங்கும் பயிற்சி மையங்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்கவோ அல்லது வரையறுக்க குழு அமைத்து முறைப்படுத்தவோ வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தக்குழு கடந்த ஜூலையில் கல்விக் கொள்கையைத் தமிழக அரசிடம் தாக்கல் செய்தது. எனினும், இதன் பரிந்துரைகள் இதுவரை பொதுவில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.