அரண்யா ஷங்கர் & அனன்யா திவாரி
தமிழகத்தில் 'திரு' , 'செல்வி' என்பது மரியாதைக்கான அடைமொழியாகும். பெயர்களுக்கு முன்னர் பயன்படுத்துவது வழக்கம். சில டெல்லி பல்கலைக்கழக கல்லூரிகளில், இந்த அடைமொழி பெரும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அட்மிஷன்களின் போது, தமிழக மாணவர்களின் OBC சான்றிதழில், பெயருக்கு முன் இதுபோன்ற அடைமொழியும், மற்ற ஆவணங்களில் அது போன்று குறிப்பிடப்படாமல் இருப்பதால், முரண்பாடு ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமின்றி, தந்தையின் பெயரை முதல் பெயராக சேர்ப்பதும், குடும்ப பட்டத்தை பெயருடன் போட்டுக் கொள்வதும், பல சிக்கல்களை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, டெல்லியில் உள்ள ஸ்ரீ ராம் காமர்ஸ் கல்லூரியில் விண்ணப்பித்துள்ள, பல தமிழக மாணவர்கள் சேர்க்கைக்காக வந்த போது, இந்த சிக்கல் எழுந்திருக்கிறது.
ஈரோட்டில் இருந்து வந்த ஹம்ஷிகா B என்பவர் B.Com(H) சேருவதற்காக, இந்தக் கல்லூரிக்கு வந்த போது, அவரது தந்தையின் பெயரால் சிக்கலை சந்தித்து இருக்கிறார். அவரது OBC சான்றிதழில், தந்தையின் பெயர் திரு பாஸ்கர் என்று குறிப்பிட்டிருக்க, அப்பெண்னின் 10ம் வகுப்பு சான்றிதழில் 'A பாஸ்கர்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஆதார் கார்டில், பாஸ்கர் ஆறுமுகம் என்று பெயர் உள்ளது.
இத்தனைக்கும் அந்த மாணவி OBC பிரிவில் 96.5% கட் ஆஃப் எடுத்தும், அவரை சேர்ப்பதா வேண்டாமா, என கல்லூரி நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.
அதேபோல், ஈரோட்டில் இருந்து வந்த நவநீதா R S என்பவரின் OBC சான்றிதழில் செல்வி நவநீதா R S என்று குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள SRCC கல்லூரியில் B.Com(H) அட்மிஷனுக்காக பெற்றோர்கள் இன்றி தனியாக வந்திருந்த அப்பெண் கூறுகையில், "எனக்கு என்ன நடக்கப் போகிறது என்றே தெரியவில்லை. எனக்கு அட்மிஷன் கிடைக்கும் என நம்புகிறேன். மீண்டும் ஈரோடு திரும்பிச் சென்று, சான்றிதழை மாற்றி வந்து சேருவது என்பதெல்லாம், மிகவும் கடினமான ஒன்றாகும்" என்றார்.
SRCC கமிட்டியின் உறுப்பினர் அஷ்வினி குமார் கூறுகையில், "டெல்லி பல்கலைக்கழகத்தின் விதிப்படி, விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களில் முரண்பாடுகள் இருந்தாலும், அவர்கள் புதிய சான்றிதழ் வாங்கி வர அறிவுறுத்துவோம். பெயர்களின் எழுத்துகளில் பல்வேறு மாற்றங்கள் இருப்பின், அவர்களுக்கு அதை சரி செய்ய 14 நாட்கள் அனுமதி தரப்படும். ஒருவேளை, சிறிய அளவிலான மாற்றம் இருப்பினும், பெயர் சரியாக எப்படி இருக்க வேண்டும் என்று விண்ணப்பதாரர்களிடம் அஃபிடவிட் வாங்கிக் கொள்வோம்" என்றார்.
ஸ்ரீ ராம் பெண்கள் கல்லூரியில், நாமக்கலில் இருந்து வந்த பெண் ஒருவர், இதே போன்றதொரு பிரச்னையை சந்தித்து இருக்கிறார். பாலிடிக்ஸ் சயின்ஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க வந்த அப்பெண்ணின், OBC சான்றிதழில் செல்வி அட்ஷயா என்று இருக்க, அவரது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் 'அட்ஷயா எஸ்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவரது சகோதரர் சேரன் கூறுகையில், "தமிழ்நாட்டில் நாம் பெண்களுக்கு செல்வி என்று அடைமொழி கொடுத்து அழைப்போம். ஆகையால், செல்வி அட்ஷயா என்று ரெஜிஸ்டர் செய்தோம். ஆனால், இங்கு அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்" என்றார்.
இவ்விவகாரம் குறித்து மாணவர் நலச் சங்க தலைவர் கூறுகையில், "இந்த பிரச்சனைகளை சந்திக்கும் மாணவர்களை, வேறு ஏதேனும் ஆவணம் கொண்டு வரச் சொல்லி பெயரை சரிபார்க்க ஏற்பாடு செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்து இருக்கிறார்.