தமிழகத்தில் வரும் அக்டோபர் 14-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான ஆசிரியர் பணிக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆசிரியர் தகுதித்தேர்வு 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்
அடுத்த கட்டமாக ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பணிக்காக மற்றொரு தேர்வு எதிர்கொள்ள வேண்டும். இந்நிலையில். இந்த ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாள் தேர்வு (இடைநிலை ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களுக்கு) மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான (6 முதல் 12-ம் வகுப்புக்கான) 2-ம் நிலை தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் ஏற்கனவே முதல்தாள் தேர்வு செப்டம்பர் 10 முதல் 15-ந் தேதிவரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு தற்போது அக்டோபர் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்தாள் தேர்வுக்கு 2,30,278 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
அதேபோல் 2-ம் தாள் தேர்வுக்கு 4.0885 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது முதல் தாள் தேர்வுக்கான தேதிகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தேர்வுகள் முடிந்த பின்னர் 2-ம் தாள் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“