Advertisment

பி.எட். பல்கலைக்கழகத்தின் சவால்களைச் சாதிப்பாரா புதிய துணைவேந்தர்?

கல்வியியல் கல்லூரிக்கு, அத்துறையில் அனுபவம் இல்லாமல் வேற்று துறையில் பணியாற்றியவரை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்பல்கலைக்கழகம் மற்றும் இதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் எண்ணிலடங்கா சவால்கள் உள்ளன. அவற்றையெல்லாம், இவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் கேள்விக்குறியானது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu Teachers Education University, Tamil Nadu Teachers Education University issues, B.Ed university issues, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், Tamil Nadu Teachers Education University vice chancellor will sove the issues, பி.எட். பல்கலைக்கழகம், B.Ed colleges,புதிய துணைவேந்தர், new vice chancellor

Tamil Nadu Teachers Education University, Tamil Nadu Teachers Education University issues, B.Ed university issues, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், Tamil Nadu Teachers Education University vice chancellor will sove the issues, பி.எட். பல்கலைக்கழகம், B.Ed colleges,புதிய துணைவேந்தர், new vice chancellor

முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்

Advertisment

தமிழகத்திலுள்ள சுமார் 750 கல்வியியல் (பி.எட்) கல்லூரிகளை ஒருகிணைத்து ஒரே பல்கலைக்கழகமாகச் செயல்படுவது தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம். இது ஆசிரியர் பயிற்சிக்காக மட்டும் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் பல்கலைக் கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பல்கலைக்கழகத்தில் கடந்த பத்து மாதங்களாக துணைவேந்தர் பதவியும், மூன்று ஆண்டுகளாக பதிவாளர் பதவியும், கடந்த ஆறு மாதமாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவியும் காலியாக இருந்து வருகிறது. இதனால் பல்கலைக்கழகமும், கல்லூரிகளும் அன்றாட, சீரான செயல்பாடுகளைச் சமாளிப்பதில் பெரும் சிரமத்தை சந்தித்து வந்தன.

இந்நிலையில், தற்போது பல்கலைக்கழகத்திற்கு நான்காவது துணைவேந்தராக முனைவர் என்.பஞ்சநாதம் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்றுள்ளார். இவர் இதற்கு முன்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் எம். பி.ஏ துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். கல்வியியல் கல்லூரிக்கு, அத்துறையில் அனுபவம் இல்லாமல் வேற்று துறையில் பணியாற்றியவரை துணைவேந்தராக நியமித்திருப்பதற்கு கல்வியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், பல்கலைக் கழகத்தின் மூன்று முக்கியப் பொறுப்புகளும் காலியாக இருந்த நிலையில் துணைவேந்தர் நியமிக்கப்பட்டிருப்பது திருப்திகரமானது. ஆனால், இப்பல்கலைக்கழகம் மற்றும் இதன் கீழ் செயல்படும் கல்லூரிகளில் எண்ணிலடங்கா சவால்கள் உள்ளன. அவற்றையெல்லாம், இவர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதுதான் கேள்விக்குறியானது.

கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ள பதிவாளர் பதவிக்கும், ஆறுமாதமாக காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி (Controler of Examinations) பதவிக்கும் புதிதாக தகுதியானவர்களை நியமிக்க நடவடிக்க எடுக்க வேண்டும்.

பல்கலைக் கழகத்தின் முதுகெலும்பான மூன்று முக்கியப் பதவிகளும் காலியாக இருந்ததால் கடந்த கல்வியாண்டு நடந்த பல்கலைக் கழகத் தேர்வு விடைதாள் திருத்துவதில் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளன. தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, தேர்வு முடிவு வராமல் தேர்வு எழுதவில்லை எனவும், தேர்வே எழுதாத மாணவர்களுக்கு தேர்வு எழுதி மிக அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றதாகவும் தேர்வு முடிவு வெளியானது. இப்படிப்பட்ட குளறுபடிகளை சுட்டிகாட்டியப் பிறகும் அதற்கான தகுந்த நடவடிக்கைகள் இதுவரையிலும் பல்கலைக் கழகத்தால் எடுக்கப்படவில்லை.

இந்தக் குளறுபடிகள் நடந்ததினால் மறுதிருத்தம் (Revaluation) மறுகூட்டல் (Recounting) போன்றவற்றிற்கு விண்ணப்பித்து மூன்று மாதங்களாக மாணவர்கள் காத்திருந்தும், அதற்கான முடிவுகள் வராததால் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் பள்ளிகளில் வேலைக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தப் பிரச்னைக்கு விரைந்து முடிவு காணவேண்டியது துணைவேந்தரின் முதல் கடமையாகும்.

பொதுவாக ஒரு கல்லூரி தொடங்கி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டால் அக்கல்லூரிக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கலாம் என்பது பல்கலைக்கழகத்தின் சட்டதிட்டத்தில் உள்ளது. ஆனால், இப்பல்கலைக்கழகத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள கல்லூரிகள் பத்திலிருந்து பதினைந்து ஆண்டுகள் ஆன பிறகும் நிரந்தர அங்கீகாரம் வழங்காமல் ஆண்டுதோறும் தொடர் இணைப்புக்கு விண்ணப்பிக்க வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பெரும்பாலான கல்லூரிகள் அவதிக்குள்ளாகின்றன. இந்த நடைமுறையை நீக்கி, கல்லூரி தொடங்கி ஐந்தாண்டுகளான கல்லூரிகளுக்கு அவற்றின் தகுதியின் அடிப்படையில் நிரந்தர அங்கீகார ஆணை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களின் நெறிமுறைகளுக்கு இணங்க முதல்வர்கள், பேராசிரியர்களை நியமனம் செய்து, அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் ஒப்புதலுக்காக விண்ணப்பித்தால், தகுதியானவர்களுக்கு வேறு எந்த எதிர்பார்ப்புமின்றி ஒப்புதல் (Staff Approval) அளிக்க வேண்டும். தற்போதைய நடைமுறையில் ஆசிரியர் தகுதி ஒப்புதல் பெறுவதற்குப் பல்கலைக்கழகத்திற்குப் பல ஆயிரங்களும் லட்சங்களும் செலவழிக்க வேண்டியுள்ளது. இது பேராசிரியர்களை பெரும் வேதனைக்குள்ளாக்குகிறது. எனவே இந்த நடைமுறையை மாற்றுவதற்கு துணைவேந்தர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் மொத்தம் ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இவற்றில் மிக குறைந்த அளவில் மட்டுமே ஏழை எளிய மாணவர்கள் படிப்பதற்கு முடியும். அதனால், ஏழை எளிய மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் செலுத்தி படிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அல்லது படிப்பதற்கு விருப்பம் இருந்தும், படிப்பதற்கு இயலாத நிலை ஏற்படுகிறது.

எனவே தமிழகத்திலுள்ள ஏழை எளிய மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அதிகமான அரசு பி.எட். கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பல்கலைக் கழகம் தொடங்கி இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் இதுவரை ஒரு அரசு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது. அல்லது தனியார் கல்லூரிகளில் ஒரு குறிப்பிட்ட இடத்தை ஏழை மாணவர்களின் படிப்பிற்காக ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரும்பாலான தனியார் கல்லூரிகளில் மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறை வசதியிலிருந்து கழிப்பறை வசதி வரை போதுமான அளவிற்கு இல்லை என்பது நிதர்சனமான உண்மை. சில கல்லூரிகளில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் இருக்க வேண்டிய அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருக்கின்றன. இப்படிப்பட்ட கல்லூரிகளில் மிகவும் நேர்மையான முறையில், நேர்மையான கல்வியாளர்களைக் கொண்டு ஆய்வு நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்படி தரம் இல்லாமல் நடத்தப்படும் கல்லூரிகளில் மாணவர்கள் கல்லூரிக்கு வராமலே படிக்கலாம் என்ற முறையில், மாணவர்களுக்கு அட்மிஷன் கொடுத்து தேர்வு மட்டும் எழுத வைக்கும் நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர். இப்படி அநியாயமாக நடக்கும் கல்லூரிகளை அடையாளம் கண்டு தக்க நடவடிக்கை எடுப்பதற்குத் துணைவேந்தர் துணிச்சலாக முன்வரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

மேலும், தற்போது மத்திய அரசு, ஆசிரியர் பயிற்சியின் தரத்தை மேம்படுத்துவதற்காக நான்காண்டு கால பி.எட். கல்வி முறையை நடைமுறைப் படுத்தியுள்ளது. இந்த நடைமுறையை தமிழகத்தில் அனைத்து பி.எட். கல்லூரிகளும் நடைமுறைப்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்றால், ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சியளித்து வருங்காலத்தில் தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கி தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்கி கல்வித்துறையைக் கரையான் அரிக்காமல் பாதுகாப்பதற்கு இயலும்.

முனைவர் கமல.செல்வராஜ், கட்டுரையாளர்,

அருமனை. மின்னஞ்சல்: drkamalaru@gmail.com

Tamil Nadu Tamilnadu Teachers
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment