/indian-express-tamil/media/media_files/fRTTGHClNqn3AIy3w7I9.jpg)
ஓ.டி.பி எண்ணை பகிரத் தயங்கும் பெற்றோர்கள்; எமிஸ் தளத்தில் தகவல்களை அப்டேட் செய்ய முடியாமல் திணறும் ஆசிரியர்கள்
பள்ளிக்கல்வித்துறையின் எமிஸ் இணையதளத்தில் மாணவர்களின் தகவல்களை பதிவேற்றம் செய்ய, பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் ஓ.டி.பி கேட்கும்போது, பெற்றோர்கள் தர மறுக்கிறார்கள் என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System - EMIS) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் ஒவ்வொரு மாணவரின் பிறந்த தேதி, வகுப்பு, மதிப்பெண்கள், சான்றிதழ்கள், பெற்றோரின் தொலைபேசி எண், கற்றல் மதிப்பீடு, கற்பித்தல் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
இந்தநிலையில், அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பல்வேறு பங்குதாரர்களுடன் புதுப்பிப்புகள் மற்றும் பிற தகவல்களைப் பகிர்ந்து கொள்ள, மொத்த செய்திகளை அனுப்புவதற்கான செய்தி தளமான வாட்ஸ் அப் (WhatsApp) மூலம் பள்ளிக்கல்வித் துறை தகவல்களை அனுப்ப உள்ளது.
அதேநேரம், குறிப்பிட்ட இடைவெளியில் புதிய கற்றல் செயல்பாடுகள் மூலம் எமிஸ் தகவல்கள் புதுப்பிக்கப்படும். அந்த வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, உதவிபெறும், தனியார் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, பெற்றோரின் தொடர்பு எண்களை சரிபார்க்க, மே 25ம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது. தற்போது எமிஸ் இணையதளத்தில் மாணவர், மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் சுமார் 1.16 கோடி தொலைபேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல எண்கள் பயன்பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. எனவே பயனற்ற எண்களை நீக்கி, புதிய எண்களை இணைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இதற்காக ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்களைத் தொடர்பு கொள்ளும் போது, அதற்கான ஓ.டி.பி (OTP) எண்ணை தெரிவிக்க பெற்றோர் மறுக்கின்றனர். இதனால் இந்தப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
வங்கிகளின் பெயரைச் சொல்லி நடைபெறும் மோசடிகளைத் தவிர்க்க சைபர் கிரைம் போலீசார் கொடுத்த விழிப்புணர்வால் ஓ.டி.பி எண்ணை பெற்றோர் தெரிவிக்க மறுக்கின்றனர் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
மேலும், இதனால் ஒவ்வொரு மாணவரின் வீட்டுக்குச் சென்று அவர்கள் முன்னிலையில் பதிவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் இப்பணியில் சுணக்கம் ஏற்பட்டது. இப்பணிகள் முடிவடைந்ததும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பெற்றோர் உடன் இணைப்பு ஏற்படும். இதற்காக ‘Department of School Education’ என்ற பெயரில் புதிய தளம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. இதில் வாட்ஸ்-அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். ஒருமுறை ஒரு தகவலை அனுப்பினால் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ்-அப்புக்கும் அந்தத் தகவல் சென்றடைந்து விடும். இதன் மூலம் பள்ளிக் கல்வித்துறை மற்றும் பெற்றோர் உடனான தகவல் தொடர்பு மிகவும் எளிமையாக விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.