தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் (Tamil Nadu Directorate of Government Examinations - TNDGE) சார்பில் நடத்தப்படும் இந்த தேர்வு இன்று தொடங்கி வரும் மார்ச் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து தேர்வுகளும் காலை 10:15 முதல் மதியம் 1:15 வரை நடைபெறும்.
தேர்வு தொடங்கவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பே மாணவர்கள் வினாத்தாள்களை படிக்கும் வகையில், வினாத்தாள் வழங்கப்படும். இதன் காரணமாக, தேர்வு தொடங்கும் நேரத்திற்கு முன்னதாக மாணவர்கள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட் இல்லாமல் தேர்வு அறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள், அட்மிட் கார்டு மற்றும் பள்ளி அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 3,302 மையங்களில் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, தமிழகம் முழுவதும் 7.25 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதனிடையே இன்று தொடங்கிய முதல் நாளில் தமிழ் மொழிப்பாடம் தேர்வ நடைபெற்றது. இந்த தமிழ் மொழிப்பாடத்தின் வினாத்தாள் எதிர்பார்பார்த்ததை விட சற்று சுலபமாகவே இருந்துள்ளது. 14 ஒரு மதிப்பெண் வினாக்களில் 12 வினாக்கள் புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள வினாக்களாகவும், ஏற்கனவே பொதுத்தேர்வுகளில் கேட்கப்பட்ட வினாக்களுமாக இருந்துள்ளது.
இதனால் ஏற்கனவே வெளியான வினாத்தாள்களை ரிவிஷன் செய்த மாணவர்களுக்கு இந்த வினாத்தாள் மிகவும் சுலபமாப இருந்துள்ளது. அதேபோல் 2 மதிப்பெண் வினாக்களும், புத்தகத்தின் பின்னால் இருந்த கேள்விகளும், ஏற்கனவே பொதுத்தேர்வுகளில் கேட்டப்பட்ட கேள்விகளாகவும் இருந்ததால், சுலபமாக இருந்துள்ளது. அதே சமயம் 4 மதிப்பெண் மற்றும் 6 மதிப்பெண் வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தது என்று சொல்ல முடியாது என்றாலும் கேள்விகள் அனைத்தும் மிகவும் நீளமான பதில்கள் எழுதக்கூடிய கேள்விகளாக இருந்துள்ளது.
அதிலும் குறிப்பாக 6 மதிப்பெண் வினாக்கள் அனைத்துமே நீளமாக பதில் எழுதும் கையில் தான் இருந்துள்ளது. இதன் காரணமாக தேர்வு எழுதிய மாணவர்கள் நேரம் கிடைக்காமல் திண்டாடியுள்ளனர். சரியாக பதில் எழுத முடியாமலும், பதில் எழுதியவர்கள் அதை திரும்ப ரிவிஷன் செய்ய நேரம் கிடைக்காமலும் இருந்துள்ளனர். இதனால் மாணவர்களுக்கு நேர தட்டுப்பாடு பெரிய பிரச்சனையாக இருந்துள்ளது என்பதே மாணவர்களின் கருத்தாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“