சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு, விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டும், வருகின்ற 26.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில், பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாகவுள்ள 427 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்படவுள்ளன. வட்டாரம் வாரியாக நேரடி நியமனம் செய்யப்படவுள்ள சமையல் உதவியாளர் பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து, அந்தந்த வட்டார அலுவலகங்களில் இனசுழற்சி வாரியாக தெரிந்துகொள்ளலாம்.
மேலும், சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுவோருக்கு, மாதமொன்றுக்கு ரூ.3,000/- தொகுப்பூதியமும், நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு ஓராண்டு கால பணிக்குப் பின்பு சிறப்பு காலமுறை ஊதியத்தில் (ஊதிய நிலை 1 (Level of Pay –ரூ.3,000-9,000)) ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பித்திடல் வேண்டும்.
மேலும், வயது நிர்ணயம் அறிவிப்பு தேதியினை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும். நியமனம் கோரும் மையத்திற்கும் விண்ணப்பத்தாரரின் குடியிருப்பிற்கும் இடைப்பட்ட தூரம் 3 கி.மீ-க்குள் இருத்தல் வேண்டும் (ஊராட்சி – குக்கிராமம் - வருவாய் கிராமம் போன்றவைகள் கணக்கில் எடுத்துக்கொள்ள தேவையில்லை).
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர் உரிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டும் வருகின்ற 26.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திடல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்துடன் பள்ளி மாற்றுச்சான்றிதழ், SSLC மதிப்பெண் சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்திடல் வேண்டும்.
மேலும், விதவை, கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் அதற்கான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்திடல் வேண்டும். நேர்முகத் தேர்வின் போது, அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளுதல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.