பொறியியல் படிப்புகளுக்கான அகமதிப்பீடு மதிப்பெண்கள் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளில் படித்து வருகின்றனர். மேலும் இதுவரை அன்லைன் முறையில் நடைபெற்று வந்த செமஸ்டர் தேர்வுகளும் இனி நேரடியாக நடைபெறும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள், செமஸ்டர் தேர்வு பணிகளில் ஈடுபட்டு வரும் கல்லூரி மற்றும் பல்கலைகழகங்கள் தேர்வு முறைகளில் புதிய மதிப்பீட்டு முறைகளை அறிவி்த்து வருகிறது.
அந்த வகையில், தமிழகத்தில் தொழில்துறை படிப்புகளுக்கான பல்கலைகழகங்களில் முன்னணியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில், மாணவர்களுக்கான பாடத்திட்டம், அக மதிப்பீட்டு மதிப்பெண், தேர்வுமுறை என அனைத்திலும் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, அகமதிப்பீட்டு மதிப்பெண்கள் இதுவரை 20 சதவீதம் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த மதிப்பெண் 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 60 சதவீத மதிப்பெண்கள் எழுத்துத்தேர்வுக்காக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முதல்வகுப்பில் தேர்ச்சி பெறுவதற்காக வழங்கப்பட்டிருந்த 7 சதவீத மதிப்பெண்கள் தற்போது 6.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு முதல் முன்னாள் மாணவர்கள் தங்கள் வைத்துள்ள அரியர்ஸ் தேர்வுகளை எழுதி முடிக்க 4 ஆண்டுகள் மட்டுமே அவகாசம் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது புதிய விதிமுறையின் படி இந்த விதி நீக்கப்பட்டுள்ளது. படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வரும் பருவத்தேர்வுகளில் தங்களது அரியர் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil