தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை நாளை (மே 6) முதல் ஆன்லைனில் தொடங்குகிறது.
12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (மே 6) வெளியாக உள்ள நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்து என்ன படிக்கலாம் என திட்டமிட்டு வருகின்றனர். மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகளைப் போலவே, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள படிப்புகளுக்கும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும் கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புகளைப் போலவே, கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கும் போட்டி கடுமையானதாக இருந்து வருகிறது.
கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் அரசு மற்றும் சில தனியார் கல்லூரிகளுக்குத் தான் மாணவர்களிடையே போட்டி இருந்து வருகிறது. பெரும்பாலான மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை, விருப்பமான கல்லூரிகளில் படிக்க கடுமையாக போட்டியிட வேண்டிய நிலை இருந்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில், இளங்கலை இயற்பியல், கணிதம், கணினி அறிவியல், மற்றும் வணிகவியல் படிப்புகளில் சேர மாணவர்களிடையே அதிக ஆர்வம் இருந்து வருகிறது.
இந்தநிலையில், தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், B.A, B.Sc, B.Com, BBA, BCA உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் சேர்க்கை பெற மே 6 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலம் அல்லது கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“