ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலை கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பி.சி, எம்.பி.சி, டி.என்.சி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி (IIT), ஐ.ஐ.எம் (IIM), ஐ.ஐ.ஐ.டி (IIIT), என்.ஐ.டி (NIT) மற்றும் மத்திய பல்கலைக் கழகங்களில் (Central Universities) பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் இன (BC, MBC, DNC) மாணவ, மாணவிகள் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கென (Fresh and Renewal applications) விண்ணப்பிக்கலாம்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள மாணாக்கர் ஒருவருக்கு கல்வி உதவித் தொகையாக கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணம் ஆகிய கட்டணங்களுக்காக மாணாக்கரால் செலுத்திய தொகை அல்லது ஆண்டிற்கு அதிகபட்சம் ரூ.2.00 இலட்சம் வரை கல்வி உதவித் தொகையாக வழங்குவதற்கு தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி கல்வி உதவித் தொகைக்கு 2024-25- ஆம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் (Fresh and Renewal applications) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணாக்கர்கள், ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5, என்ற முகவரியிலுள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகியோ அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarship_schemes என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், 2024-25 ஆம் நிதியாண்டிற்கான புதியது (FRESH) மற்றும் புதுப்பித்தல் (RENEWAL) கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை மாணவர்கள் பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பித்தல் வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பரிந்துரை செய்து, ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்த புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்களை வருகின்ற 15.12.2024-க்குள் மற்றும் புதியது (Fresh) விண்ணப்பங்களை 15.01.2025-க்குள் அனுப்பி வைத்தல் வேண்டும்.
மேலும், விபரங்களுக்கு 044-29515942 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது tngovtiitscholarship@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியின் வாயிலாகவோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.