தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் இன்று (டிசம்பர் 6) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது; தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்வெழுத விருப்பமுள்ள தனித்தேர்வர்களிடம் இருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதையடுத்து, தனித்தேர்வர்கள் இன்று (டிசம்பர் 6) முதல் டிசம்பர் 17-ம் தேதிக்குள் கல்வி மாவட்ட வாரியாக உள்ள அரசு சேவை மையங்களுக்கு நேரில் சென்று தங்கள் விண்ணப்பங்களை தேர்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
இதுதவிர தேர்வுக் கட்டணம், விரிவான தேர்வு கால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே மாணவர்கள் தங்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“