தமிழகம் முழுவதும் 8.23 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வு மார்ச் 27-ஆம் தேதி வரை 3,316 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. தமிழ் மற்றும் பிற மொழிப் பாடங்களுடன் காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வு, மதியம் 1:15 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்த தேர்வுகளுக்கான முடிவு ஏப்ரல் 19-ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வுகள் தொடர்பான கேள்விகள் மற்றும் புகார்களை தெரியப்படுத்த 94983-83075 மற்றும் 94983-83076 ஆகிய உதவி எண்களை பயன்படுத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பொறியியல் மற்றும் பிற கல்லூரிப் பட்டப்படிப்புகளை தொடர்வதற்கு தமிழ்நாடு அரசின் 11-ஆம் வகுப்பு பாடத்திட்டம் முக்கிய பங்கு வகிப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, "கல்லூரி பட்டப்படிப்புகளை தொடரும் போது மாணவர்கள் மிகவும் தீவிரமாகவும், ஆழமாகவும் கருத்துகளை கற்றுக்கொள்வதற்காக 11-ஆம் வகுப்புக்கான இறுதித் தேர்வு அமைகிறது" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.