கடலூரில், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறும் மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் திடீர் விசித்து அடித்து பார்வையிட்டார்.
கடலூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, வேணுகோபாலபுரம் ஸ்ரீ வரதம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் இன்று (28.03.2025) நேரில் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறகையில், தமிழ்நாடு முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 27.03.2025 அன்று தொடங்கப்பட்டு 15.04.2025 வரையில் நடைபெறவுள்ளது. கடலூர் கல்வி வட்டத்தில் 232 மற்றும் விருத்தாசலம் கல்வி வட்டத்தில் 205 என மொத்தம் 437 பள்ளிகள் மூலம் நடத்தப்படுகிறது, இத்தேர்வினை கடலூர் கல்வி வட்டத்தில் 9,791 மாணவர்கள், 9019 மாணவிகள், விருத்தாசலம் கல்வி வட்டத்தில் 7,593 மாணவர்கள், 6,551 மாணவிகள் என 32,954 மாணவ,மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு சார்பாக கடலூர் கல்வி வட்டத்தில் 85, விருத்தாசலம் கல்வி வட்டத்தில் 71 என மொத்தம் 156 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வினாத்தாள்களை கொண்டு செல்ல கடலூர் வட்டத்தில் 18, விருத்தாசலம் வட்டத்தில் 17 என மொத்தம் 35 வழித்தட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 156 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 156 துறை அலுவலர்களும், 24 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும், 35 வழித்தட அலுவலர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அறைக்கண்காணிப்பாளராக 1,720 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். பறக்கும்படை உறுப்பினர் மற்றும் நிலைப் படை உறுப்பினர்களாக 332 ஆசிரியர்கள் பணி மேற்கொள்கின்றனர். மேலும், ஒவ்வொரு தேர்வு மையங்களிலும், மாணவர்களின் நலன் கருதி குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, தடையில்லா மின்சார வசதி, காவல்துறையினரின் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு சென்றிட ஆயுதம் தாங்கிய காவலருடன் பாதுகாப்புடன் கூடிய வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு இத்தேர்வானது தங்களுடைய எதிர்கால வாழ்வினை தீர்மானிக்கும் தேர்வு என்பதால் கவனமுடன் வினாத்தாட்களை படித்து நன்கு தேர்வு எழுதிட வேண்டும். மேலும், நடைபெறும் பொதுத்தேர்வினை எவ்வித அச்சமும் இன்றி, சிந்தனைகளை சிதற விடாமல், தேர்வு முடியும் வரை நாள்தோறும் பாடங்களை நன்கு படித்து தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்,
செய்தி: பாபு ராஜேந்திரன்