10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய அக்டோபர் 25 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
“தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) 10, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்களின் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், சில பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றுவதில் சிரமங்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளன.
இதை கருத்தில் கொண்டு 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களின் தரவுகளை எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதி வாய்ப்பாகும். எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வுத்துறை இணைய தளத்தில் சென்று (www.dge.tn.gov.in) மாணவர்களின் தகவல்களை விரைந்து பதிவு செய்ய வேண்டும். இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும்.” இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“