தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண்கள் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு வருகின்ற மார்ச் 3 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான, செய்முறைத் தேர்வுகள் வருகின்ற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதற்காக மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
அதேநேரம், தேர்வு எழுதும் மாணவர்கள் பட்டியல் தயாரிப்பு, தேர்வு மையம் அமைத்தல் உள்ளிட்ட முன்னேற்பாடுகளை தேர்வுத்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் ந.லதா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது;
11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் அகமதிப்பீடு மதிப்பெண் அளிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி மாணவர்களின் 81- 100 சதவீத வருகைப் பதிவுக்கு 2 மதிப்பெண்ணும், 75- 80 சதவீத வருகைப்பதிவுக்கு ஒரு மதிப்பெண் தர வேண்டும்.
ஒவ்வொரு பாடத்திற்கும் குறைந்தபட்சம் நான்கு உள்நிலைத் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். செயல்திட்டம், களப்பயணம் ஆகியவற்றுக்கு அதிகபட்சமாக 2 மதிப்பெண்கள் வழங்க வேண்டும்.
இலக்கிய மன்றம், என்.சி.சி, மரம் வளர்த்தல், என்.எஸ்.எஸ், கணித மன்றம் ஆகியவை உள்ளிட்ட 33 கல்வி இணைச் செயல்பாடுகளில் ஏதேனும் மூன்று செயல்பாடுகளில் பங்கேற்றுள்ள மாணவர்களுக்கு அதிகபட்சம் இரண்டு மதிப்பெண்கள் வழங்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதை அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை பின்பற்றி வருகைப்பதிவு, பள்ளித் தேர்வுகள், செயல் திட்டங்கள் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகளின் அடிப்படையில் மாணவர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் வழங்கப்பட வேண்டும். இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.