டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கான இடஒதுக்கீட்டை முறைகேடாக சான்றிதழ் வாங்கி பயன்படுத்திக் கொண்ட 4 அரசு அதிகாரிகள் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
தமிழகத்தில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பில் 20% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட அனைத்து பணி நியமனங்களிலும் இந்த இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இந்தநிலையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கான இடஒதுக்கீட்டை போலி சான்றிதழ் மூலம் பெற்று அரசுப் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக பொது நல வழக்கு தொடரப்பட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சக்திராவ், ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2021ல் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2019ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டிற்கான சலுகையை பலர் தவறாக பயன்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட் கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. அந்த உத்தரவுகள் நிறைவேற்றப்படவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.வேல்முருகன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், ‘‘2019ல் நடந்த குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்றவர்களிடம் விசாரணை செய்யப்பட்டது. போலியாக சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக 4 பேர் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் மூன்று பேர் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மட்டும் இந்த முறைகேடு நடந்ததா இல்லை வேறு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது’’ என கூறப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘‘2019ல் நடந்த குரூப் 1 தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீட்டில் எத்தனை பேர் தேர்ச்சி பெற்றனர்? அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதா? ஏன் இத்தனை ஆண்டுகள் கழிந்த பிறகு தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஐகோர்ட் கிளை 2021ல் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை மெத்தனமாக செயல்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவையே நிறைவேற்றுவதில்லை’’ என்றனர்.
பின்னர் நீதிபதிகள், ‘‘இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு துறைக்கு இறுதியாக 15 நாள் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இல்லாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடும் உத்தரவுகளை பிறப்பிக்கப்படும். வழக்கின் விசாரணையை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க நேரிடும். குரூப் 1 உள்ளிட்ட தேர்வுகளில் தமிழ் வழியில் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டது? எத்தனை பேர் இட ஒதுக்கீட்டில் பயன்பெற்றனர். அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் தற்போது வரை தமிழ் வழி இட ஒதுக்கீட்டில் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர் என்பது குறித்த விபரத்தை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை வரும் 21 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்தநிலையில், குரூப் 1 தேர்வில் போலியாக தமிழ் வழிக் கல்வி சான்று கொடுத்த விவகாரத்தில் மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த உதவி கமிஷனர் (மாநில வரிகள்) திருநங்கை ஸ்வப்னா (34), திருப்பாலையைச் சேர்ந்த கோவை கலெக்டர் அலுவலக நேர்முக உதவியாளர் சங்கீதா (40), சேலம் ஆத்தூர் டி.எஸ்.பி சதீஷ்குமார் (40), காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ கலைவாணி (37), மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக மூத்த கண்காணிப்பாளர் சத்யமூர்த்தி (62 – சஸ்பெண்ட்), பல்கலைக்கழக தொலைதூர கல்வித் திட்ட கண்காணிப்பாளர் புருஷோத்தமன் (59), தேனி மாவட்டம் பங்களாப்பட்டியைச் சேர்ந்த லைஃப் கல்வி அறக்கட்டளை நிர்வாகி முரளி (40), அறக்கட்டளை திட்ட அலுவலர் நாராயணபிரபு (41), கோவையைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் ஆகிய 9 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
முன்னதாக, 2020 ஆம் ஆண்டில், உயர்கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தரின் அறிக்கையின் அடிப்படையில், தொலைதூரக் கல்வி இயக்குநரகம் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், பொதுநல வழக்கின் அடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தேர்வுகள் மற்றும் தமிழ் வழிக் கல்விச் சான்றிதழ் வழங்குவதில் செய்யப்பட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டது.
இதனையடுத்து, 2012 முதல் 2019 வரை குரூப் 1 தேர்வில் தமிழ் வழிக் கல்விச் சான்றிதழ் மூலம் வேலை பெற்ற 22 தேர்வர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தியது. அவர்களில் நான்கு பேர் தொலைதூரக் கல்வி மூலம் தங்கள் படிப்பை முடித்தவர்கள். ஆனால் அவர்கள் வழங்கிய தமிழ் வழிக் கல்விச் சான்றிதழ்கள் உண்மையானவை அல்ல, ஏனெனில் அவர்களின் சேர்க்கை பதிவுகள் இயக்குநரகத்தில் காணப்படவில்லை. அவர்கள் முறைகேடாக சான்றிதழ்களை பெற்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அவர்களில் ஒருவர் பி.ஏ தமிழ் முடித்ததற்கான சான்றிதழைப் பெற்றிருந்தார், ஆனால் இரண்டு வெவ்வேறு கல்லூரிகளில் படித்தவர் என்று காவல்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. விண்ணப்பதாரர் பதிவுக் கட்டணமாக ரூபாய் 100 செலுத்தியதற்கான பதிவு 2012 இன் தொலைதூர கல்வி இயக்குநரகத்தின் பதிவேட்டில் காணப்படவில்லை. மேலும், அவர் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படும் நேரத்தில் இருந்து ஒரே அமர்வில் (ஆறு மாதங்களுக்குள்) 18 பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளார். மதிப்பெண் அறிக்கை, படிப்பு முடித்ததற்கான சான்றிதழ், தற்காலிக சான்றிதழ், தமிழ் வழிக் கல்விச் சான்றிதழ் மற்றும் பிறவற்றை வழங்குவதற்கான பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. அவர் பி.ஏ தமிழ் படித்ததாகக் காட்டுவதற்காக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்களின் துணையுடன் போலிச் சான்றிதழைப் பெற்றுள்ளார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.