தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள 8997 சமையல் உதவியாளர் பணியிடங்களை மாதம் ரூ3000 தொகுப்பூதியத்தில் நிரப்ப தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் காமராஜர் ஆட்சி காலத்தல் கொண்டுவரப்பட்ட பள்ளிகளில் மதிய உணவு திட்டம் கடந்த 1982-ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சிறப்பு பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டத்தில், பல ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இதில் காலியாக உள்ள 8997 சமையல் உதவியாளர்கள் பணியிடங்களை நிரப்ப சமூக நலத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த பணியிடங்கள் அனைத்தும் மாதம் ரூ3000 தொகுப்பு ஊதியத்தில் நிரப்பபட உள்ளது. இந்த திட்டத்தில் நியமிக்கப்படுவபவர்கள், ஒரு வருடத்திற்கு, சிறப்பாக பணியாற்றும்போது, சிறப்பு காலமுறை ஊதியமும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், இதன் கீழ் சிறப்புக் கால முறை ஊதிய (STS) நிலை -1 (ரூ.3000-9000)) வழங்கப்படும்.
கல்வித்தகுதி
இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு படித்திருந்தாலே போதுமானது. சென்னையில் இதற்காக இணை இயக்குநர் நியமன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்புவதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.27 கோடி செலவு கூடுதலாக ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படும் மதிய உணவு திட்டத்தின் கீழு் பல மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
மேலும், பள்ளிகளில், மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது, பள்ளிகளில் மாணவர் வருகையைத் தக்கவைப்பது, குழந்தைகளின் ஊட்டச்சத்து அளவை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம், பலருக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த, சமையல் உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. முதலில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வந்த இந்தத் திட்டம் அதன்பிறகு ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், கடந்த 2006 முதல் சமூக நலத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“