Advertisment

பாடப் புத்தகங்களின் விலை உயர்வு ஏன்? அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

பாடப் புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே விலை உயர்த்தப்பட்டுள்ளது; அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

author-image
WebDesk
New Update
 Minister Anbil Mahesh to submit Research Paper at Trichy ICRS Seminar Tamil News

பாடப் புத்தகத்தின் மூலப் பொருட்களின் விலை உயர்வின் காரணமாக பாடப்புத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வு லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களின் விலையை உயர்த்தி தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் அறிவித்தது. இதனால் தனியார் பள்ளிகளும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகுபவர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில், பள்ளி பாடப் புத்தகத்தின் விலை உயர்வு தொடர்பாக எழுந்த கடும் எதிர்ப்பை தொடர்ந்து, பாடநூல் விலை லாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, 

“தமிழகத்திலுள்ள அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது. தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நியாயமான விலையில் பாடநூல்கள் வழங்கப்பட்டு வருகிறது.

முந்தைய ஆட்சிக்காலத்தில் 2015 -16 ஆம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 370 சதவிகிதமும், 2018 – 19 ஆம் கல்வியாண்டில் அதிகபட்சமாக 466 சதவிகிதமும் பாடநூல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 11 ஆம் வகுப்பு புவியியல் பாடப்புத்தகம் 466 சதவிகிதம், 11 ஆம் வகுப்பு வணிகவியல் பாடப்புத்தகம் 325 சதவிகிதம், 11 ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகம் 300 சதவிகிதம் என பாடநூல்கள் விலை அதிகபட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக 2013 – 14 ஆம் கல்வியாண்டிலும் பாடநூல்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

எனவே, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை காகிதம், மேல் அட்டை மற்றும் அச்சுக்கூலி ஆகியவற்றை கணக்கில் கொண்டு பாடப்புத்தகத்தின் விலை உயர்த்தப்படுவது என்பது வழக்கமான நடைமுறையாகும். ஒவ்வொரு ஆண்டும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பதற்கான உற்பத்தி பொருட்களான காகிதம் மற்றும் மேல் அட்டைகளின் கொள்முதல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. 

2018 ஆம் ஆண்டோடு ஒப்பிடும் போது காகிதம் விலை 63 சதவிகிதமும், மேல் அட்டை விலை 33 சதவிகிதமும் மற்றும் அச்சுக்கூலி 21 சதவிகிதமும் உயர்ந்துள்ளது. எனவே அந்த விலையேற்றங்களை ஈடுகட்டும் வகையிலேயே பள்ளி பாடநூல்களின் விலை 6 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த விலை உயர்வு இலாப நோக்கத்திற்காக உயர்த்தப்படவில்லை. பாடப்புத்தகத்தின் மேல் அட்டை, காகிதம் மற்றும் அச்சுக்கூலி உள்ளிட்டவைகளின் விலை உயர்வின் காரணமாக பாடபுத்தகம் தயாரிப்பதற்கு ஆகும் செலவினை ஈடுகட்டுவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பத்தை சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லாப் பாடநூல்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம், மாவட்ட நூலகங்கள் மற்றும் அறிவு சார் மையங்களுக்கு தேவையான அளவு பள்ளி பாடநூல்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வரசு என்றுமே மாணவர்களின் நலன் நாடும் அரசாகவே செயல்படும்.” இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

School Education Anbil Mahesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment