Tamilnadu Education Update For +2 Students : தமிழகத்தில் ஏற்கனவே 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 12-ம் வகுப்பு மாணவர்களும் முழு தேர்ச்சி என அறிவிக்க ஆலோசனை நடைபெறுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் முதலில் 12-ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளியில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து 9,10,11 ம் வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
இந்த வகுப்புகள் அனைத்தும் கொரோனா தடுப்பு நடவடிக்கைளை பின்பற்றி நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் இறுதியாண்டு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், இன்று முதல் (மார்ச் 22) பள்ளிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ளது. இதில் தேனி மாவட்டம் போடிநாய்க்கனூர் தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், சீலயம்பட்டியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த பிரச்சாரத்தில் போது சீலயம்பட்டி அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து மக்களிடம் பேசிய அவர், 9,10,11-ம் வகுப்பு மாணவர்களை போல 12-ம் வகுப்பு மாணவர்களும் முழு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கும் பணி விரைவில் தொடக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"