தமிழ்நாட்டில், பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பிக்கும் செயல்முறை இன்று முதல் (ஜூலை 26) துவங்குகிறது. தமிழ்நாட்டில், கொரோனா காரணமாக 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளதால், பொறியியல் இடங்கள் முழுமையாக நிரம்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் தனியார் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். TNEA இணையதளத்தில் மாணவர்கள் சிரமமின்றி விண்ணப்பிக்க தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 500க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை தவிர சுயநிதி பொறியியல் கல்லூரிகளும் உள்ளன. ஆனால், கடந்த ஆண்டு பெரும்பாலான தனியார் பொறியியல் கல்லூரிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. சுமார் 340 பொறியியல் கல்லூரிகளில் 1.5 பொறியியல் இடங்கள் காலியாக இருந்தன.
ஆனால் இந்த முறை 100% தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளதால் பொறியியல் கல்லூரிகளின் இடங்கள் முழுமையாக நிரம்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த் ஆண்டு 30000க்கும் மேற்பட்ட மாணவர்கள் 551-600 மதிப்பெண்கள் எடுத்துள்ளதால், முக்கிய கல்லூரிகளில் இடங்களைப் பெற மாணவர்களிடையே போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது.
மேலும், தமிழ்நாடு அரசு தற்போது, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதால், பொறியியல் படிப்புகளுக்கான வேலைவாய்ப்பு அதிகமாகும் என்றும் தெரிகிறது. இதுவும் இந்த ஆண்டு மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர ஆர்வம் காட்டுவதற்கான ஒரு காரணமாகும்.
கூடுதலாக இந்த நிறைய பொறியியல் கல்லூரிகளில், வேளாண்மை, செயற்கை நுண்ணறிவு, மெசின் லேர்னிங் போன்ற படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டுவதாக தெரிகிறது. இந்த நிலையில், பல சுயநிதி பல்கலைக்கழகங்கள் ஏற்கனவே, மாணவர் சேர்க்கையை துவங்கிவிட்டன.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil