Advertisment

பொறியியல் கவுன்சிலிங்: ஆன்லைனில் விண்ணப்பிக்க இதையெல்லாம் கவனத்தில் வையுங்க!

Tamilnadu Engineering Admission online application process and counselling details: பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழுத் தகவல்கள் இங்கே

author-image
WebDesk
New Update
7.5% இடஒதுக்கீட்டால் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளான, பி.இ, பி.டெக் படிப்புகளில் சேர, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.

Advertisment

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ், பல்கலைக்கழக துறைகள், உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு, தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் நடைபெறுகிறது.

கல்வித் தகுதி

இளங்கலை பொறியியல் (B.E, B.Tech) படிப்புகளில் சேர 10+2 அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த படிப்புகளில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டும். மாறாக பொறியியல் தொழிற்கல்வி படிப்பைப் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

பொறியியல் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண் கணக்கீட்டிற்கு கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும். இதேபோல் தொழிற்கல்வி பயின்றவர்களுக்கு, கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களுடன் தொடர்பு பாடங்களாக இருக்கும் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கீட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்த பாடங்களில் பொதுப்பிரிவினர் – 45%, BC/MBC/DNC – 40%, SC/ST – 40% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

இடஒதுக்கீடு

பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையைப் பின்பற்றி இருக்கும். அதன்படி

பொதுப் பிரிவினர் – 31 %

BC – 26.50%

BCM (முஸ்லீம்) – 3.50%

MBC (வன்னியர்) – 10.50%

MBC & DNC – 7%

MBC – 2.50%

SC – 15%

SCA – 3%

ST – 1%

சிறப்பு ஒதுக்கீடு

முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விளையாட்டு பிரிவில் சிறப்புத் தகுதி பெற்றவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. பொறியியல் கலந்தாய்வின்போது முதல் இந்த சிறப்பு ஒதுக்கீடு நிரம்பிய பின்னரே பொது கலந்தாய்வு நடத்தப்படும்.

முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் 8 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் 34 இடங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 108 இடங்கள் என மொத்தம் 150 இடங்கள் உள்ளன.

மாற்றுத்திறனாளிகள் ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பிரிவுக்கும் 1% இடம் வீதம் 5% இடங்கள் உள்ளன.

விளையாட்டுத் துறையில் சிறப்பு தகுதி பெற்றவர்களுக்கு பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் 12 இடங்கள், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 488 இடங்கள் என மொத்தம் 500 இடங்கள் உள்ளன.

விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியம். இதற்கு https://www.tneaonline.org/  எனும் இணையதள பக்கத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பமானது, விண்ணப்பப் பதிவாகவும், இணையவழிக் கலந்தாய்வு சேர்க்கைக்கும் சேர்ந்ததாக இருக்கும். விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல், பதிவு கட்டணம் செலுத்துதல், விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தல், தற்காலிக இடஒதுக்கீட்டை ஏற்றல் அல்லது நிராகரித்தல், முடிவு செய்யப்பட்ட இடஒதுக்கீட்டு ஆணையைப் பெறுதல் என அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்படும்.

விண்ணப்பப் பதிவுக்கு தேவையானவை

மாணவர் அல்லது பெற்றோரின் அலைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான டெபிட் அல்லது கிரெடிட் கார்டு அல்லது ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான பிற வசதிகள் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும்.

ஆன்லைனில் பணம் செலுத்த முடியாதவர்கள், ”THE SECRETARY TNEA” என்ற பெயரில் CHENNAI – 600025 என்ற இடத்தில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையை (Demad Draft) எடுக்கலாம்.

விண்ணப்பப் பதிவுக் கட்டணம்

பொதுப் பிரிவினர் – ரூ. 500

SC, SCA & ST பிரிவினர் – ரூ. 250

சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர் ஒவ்வொரு சிறப்பு பிரிவுக்கும் கூடுதலாக ரூ. 100 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் மாணவரின் புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்று மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவை அவசியம்.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்கள் சிறப்பு இடஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்கள் அதற்குரிய சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டும்.

முதல் பட்டதாரி கல்வி கட்டணச் சலுகை, SC, SCA & ST மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய SC, SCA பிரிவினருக்கான உயர்கல்வி உதவித் தொகை பெற விரும்புபவர்கள் அதற்கான சான்றிதழ்களையும் வைத்திருக்க வேண்டும்.

சாதிச் சான்று

SC & SCA பிரிவைச் சேர்ந்தவர்கள் வட்டாட்சியரிடமும்,  ST வகுப்பில் சென்னையில் இருப்பவர்கள் மட்டும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடமும், மற்ற மாவட்டங்களில் உள்ளவர்கள் துணை ஆட்சியர் அல்லது மண்டல வருவாய் அலுவலரிடமும் சாதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

BC, BCM, MBC & DNC பிரிவினர் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் அல்லது மண்டல துணை வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் (சான்றிதழ்) அவர்களிடமும் சாதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு கட்- ஆப்

மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியினைத் தேர்வு செய்து கொள்வதற்கு வசதியாக, கடந்த ஆண்டில் ஒவ்வொரு கல்லூரிக்கும், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடஒதுக்கீட்டு பிரிவுகளின் வாரியாக மாணவர் சேர்க்கைக்கான கட்-ஆப் மதிப்பெண்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், மாணவர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண்களுக்கு அவர்கள் விரும்பும் கல்லூரி கிடைக்குமா என்பதை கணிக்க முடியும்.

பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவினை வீட்டிலிருந்தோ, இணையச் சேவை மையங்களிலோ செய்யலாம். இணைய வசதி கிடைக்காதவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் மூலமாக இலவசமாக விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பப் பதிவுக்கான கடைசி தேதி : 24-08-2021

உதவி மையங்கள்

சென்னை மண்டலம் (7):  சென்னையில் 5 இடங்கள், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் தலா 1

வேலூர் மண்டலம் (8): திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு தலா 2 மையங்கள் இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களுக்குத் தலா 1

சேலம் மண்டலம் (7): கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர் மாவட்டங்களுக்குத் தலா 1

கோயம்புத்தூர் மண்டலம் (8): கோயம்புத்தூர் – 3, ஈரோடு – 2, திருப்பூர், கரூர், நீலகிரி மாவட்டங்களுக்குத் தலா 1

காரைக்குடி மண்டலம் (10): திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்கள் – 2, நாகப்பட்டினம், அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்குத் தலா 1

போடி மண்டலம் (6): மதுரை – 2, இராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களுக்குத் தலா 1

திருநெல்வேலி மண்டலம் (4): திருநெல்வேலி – 2, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்குத் தலா 1

என்று தமிழ்நாட்டில் 7 மண்டலங்களில் மொத்தம் 50 என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

பொறியியல் கலந்தாய்வு

விண்ணப்பப் பதிவுக்கான கடைசி தேதி : 24-08-2021

சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) வழங்கப்படும் நாள்: 25-08-2021

தர வரிசைப் பட்டியல் வெளியீடு : 04-09-2021

சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு : 07-09-2021 முதல் 11-09-2021

பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு : 14-09-2021 முதல் 04-10-2021

துணைக் கலந்தாய்வு : 12-10-2021 முதல் 16-10-2021

SC, SCA பிரிவினருக்கான கலந்தாய்வு : 18-10-2021 முதல் 20-10-2021

 ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்தக் கலந்தாய்வில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்யலாம். கலந்தாய்வில் பங்கேற்கும்போது SC, SCA பிரிவினர் ரூ.1000 மற்றும் பிற பிரிவினர் ரூ. 5000 முன்பதிவுக் கட்டணமாகச் செலுத்திட தயாராக இருக்க வேண்டும்.

விரும்பிய கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்து, ஆன்லைன் மூலமாகவே பொறியியல் சேர்க்கைகான ஆணையினைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்பிறகு, இடம் கிடைக்கப் பெற்ற கல்லூரிக்கு ஆணையில் குறிப்பிடப்பட்ட நாளுக்குள் சென்று உரிய சான்றிதழ்களைச் சமர்ப்பித்து, கல்லூரிக்கான கல்வி மற்றும் இதர கட்டணங்களைச் செலுத்த வேண்டும். அக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் முதல் வாரத்திலோ வகுப்புகள் தொடங்கும்.

பொறியியல் சேர்க்கைக்கான கூடுதல் தகவல்களை அறிய, https://www.tneaonline.org/  மற்றும் https://www.tndte.gov.in/ ஆகிய இணையதளங்களில் உள்ள மாணவர்களுக்கான தகவல்கள் மற்றும் வழிமுறைகள் குறிப்பேட்டை பார்க்கவும். மேலும், அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை உதவி மையங்கள் அல்லது “Directorate of Technical Education (DoTE), 53, Sardar Patel Road, Guindy, Chennai - 600025” எனும் முகவரியிலுள்ள அலுவலகத்திற்கு நேரில் சென்றும் தெரிந்து கொள்ளலாம். அலுவலக வேலை நாட்களில் 0462-2912081, 82, 83, 84 & 85 அல்லது 044-22351014, 044-22351015 எனும் எண்களில் தொடர்பு கொண்டும் தகவல்களைப் பெறமுடியும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Anna University Tn Engineering Admissions
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment