தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; கட் ஆஃப் கூடுமா? குறையுமா?

பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் எவ்வளவு இருக்கும்? கூடுமா? குறையுமா? கல்வியாளர்கள் கூறுவது என்ன?

Tamilnadu Engineering admissions 2022 expected cut off details: பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் எவ்வளவு இருக்கும், எந்த கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு என்ன நிலை கல்லூரிகள் கிடைக்கும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்து என்ன என்று யோசிக்க தொடங்கியுள்ளனர். மதிப்பெண்களைப் பொறுத்து, எந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வழக்கத்தை விட சற்று கடினமாக இருந்ததால், கட் ஆஃப் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும் கடந்த ஆண்டு அனைவரும் தேர்ச்சி மற்றும் பெரும்பாலான மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் இருந்ததால், கட் ஆஃப் அதிகமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என கல்வியாளர் ரமேஷ்பிரபா கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்: ட்ரெண்டிங் என்ஜினீயரிங் கோர்ஸ் இதுதான்… கோவை டாப் 5 கல்லூரிகள் லிஸ்ட் இதோ!

அதேநேரம், எந்ததெந்த படிப்புகளில் எவ்வளவு கட் ஆஃப் குறையும், எந்த படிப்புகளுக்கு கட் ஆஃப் அதிகரிக்கும் உள்ளிட்ட தகவல்களை கல்வியாளர், ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் சேனலான, கேரியர் கைடன்ஸ் ஜெயபிரகாஷ் காந்தி என்ற சேனலில் கூறியுள்ளார். மேலும், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறையும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏனெனில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, 591-600 மதிப்பெண்களுக்கு இடையில், 656 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். 581 மதிப்பெண்களுக்கு மேல், 4482 மாணவர்கள் உள்ளனர். 571 மதிப்பெண்களுக்கு மேல் 11,156 மாணவர்கள் உள்ளனர். 551 மதிப்பெண்களுக்கு மேல் 30,133 மாணவர்கள் உள்ளனர். 501 மதிப்பெண்களுக்கு மேல், 1,02,928 மாணவர்கள் உள்ளனர். இவர்களில் வணிகவியல் படித்த மாணவர்களும் உள்ளனர். இதேபோல், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான முக்கிய பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல் படிப்புகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.

அதேநேரம், கடந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்களில் 190 மதிப்பெண்களுக்கு மேல் 7,530 மாணவர்கள் இருந்தனர். 180க்கு மேலான கட் ஆஃப் மதிப்பெண்களில் 28,737 மாணவர்கள் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டில் 190 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 11,000 என்ற அளவிலே உள்ளது. இதேபோல், 180க்கு மேல் வருபவர்களின் எண்ணிக்கை 20,000 என்ற அளவிலே உள்ளது. எனவே கண்டிப்பாக இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும். குறைந்தப்பட்சம் 4-5 மதிப்பெண்கள் வரை கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.

அதனால், கடந்த ஆண்டு 195 க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களின் இடங்கள், இந்த ஆண்டு 190 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல் கட் ஆஃப் 5 மதிப்பெண்கள் வரை குறையலாம்.

கடந்த ஆண்டு தேர்வு நடக்காததால் கட் ஆஃப் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த முறை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், நேரடி வகுப்புகள் என்று நிச்சயமற்ற நிலை இருந்து, கடினமான சூழ்நிலையில் தேர்வு எழுதியுள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளுக்கு இடையிலும், தேர்வில் மாணவர்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். இருப்பினும் கடந்த ஆண்டை விட கட் ஆஃப் குறையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu engineering admissions 2022 expected cut off details