நான்காம் கட்ட கவுன்சிலிங் அக்டோபர் 26 வரை நடைபெற உள்ளதால், முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. மூன்று கட்ட கவுன்சிலிங் முடிவடைந்துள்ள நிலையில் 4 ஆம் கட்ட கவுன்சிலிங் நேற்று முதல் தொடங்கியுள்ளது.
இதில், முதல் கட்ட கவுன்சிலிங்கின் போது 11,224 மாணவர்கள் இறுதி ஒதுக்கீடுகளைப் பெற்றுள்ளனர். இரண்டாம் சுற்று கவுன்சிலிங்கில் 20,438 மாணவர்கள் இறுதி ஒதுக்கீடு பெற்றுள்ளனர். இதேப்போல், மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கின் போது 23,716 மாணவர்கள் இறுதி ஒதுக்கீடு பெற்றுள்ளனர். அதன்படி, இதுவரை, மூன்று சுற்று கவுன்சிலிங்கின் முடிவில் 55,378 மாணவர்கள் இறுதி ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.
நான்காவது மற்றும் இறுதி சுற்று கவுன்சிலிங்கில் 50,854 மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, விருப்பமான கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்து நிரப்புவதற்கான செயல்முறை நடந்து வருகிறது.
கடைசி சுற்று கவுன்சிலிங்கில் மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு அக்டோபர் 15 ஆம் தேதி வழங்கப்படும். அக்டோபர் 17 ஆம் தேதி இந்த மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு செய்யப்படும்.
இந்த ஆண்டு, அண்ணா பல்கலைக்கழகம் உட்பட மொத்தம் 476 கல்லூரிகளில் 1,51,870 இடங்களுக்கு 1,38,531 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
4 சுற்று கவுன்சிலிங் முடிந்த பிறகு, துணை கவுன்சிலிங் அக்டோபர் 19 முதல் 23 வரை நடைபெறும். பின்னர், SC பிரிவுக்கான கவுன்சலிங் அக்டோபர் 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இந்த நிலையில், தமிழகத்தில் பொறியியல் இடங்களைப் பெற்ற மாணவர்களின் இறுதிப் பட்டியல் அக்டோபர் 25 மாலை வெளியிடப்படும் என்றும் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான கல்லூரிகள் நவம்பர் முதல் வாரத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் அக்டோபர் 25 முதல் தொடங்கும் என்று கூறியிருந்தார். தற்போது பொறியியல் கவுன்சிலிங்கின் செயல்முறை அக்டோபர் 26 வரை உள்ளதால் நவம்பர் முதல் வாரத்தில் வகுப்புகள் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil