School Reopening Guidelines Tamil: தமிழ்நாட்டில் இருக்கும் 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நிச்சயம் நேற்றைய பொழுது பல மைண்ட் வாய்ஸ்களை உள்ளடக்கியதாக இருந்திருக்கும். பேண்டமிக் காலகட்டத்தினால் நீண்ட மாதங்களாகப் பூட்டப்பட்டிருந்த பள்ளிகள் வருகிற அக்டோபர் 1 முதல் திறக்கப்படவுள்ளது. வீட்டிற்குள் இருந்தபடியே ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் பயின்று வந்த மாணவர்கள் இனி தன்னார்வ அடிப்படையில் பள்ளிகளுக்குச் செல்லலாம்.
என்னதான் ஊரடங்குப் பின்பற்றப்பட்டாலும், கோவிட்-19-ஆல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பது சரியானதா என்கிற விவாதம் ஒரு பக்கம் இருந்தாலும், சில கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ரூல் 1 - இவர்களுக்கு மட்டுமே அனுமதி: கட்டுப்பாட்டுக்குள் இல்லாத அரசு, அரசு சார்ந்த மற்றும் தனியார்ப் பள்ளிகள் மட்டுமே திறக்கப்படும். கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசிக்கும் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு நிச்சயம் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி இல்லை.
ரூல் 2 - குழு அமைப்பு : அதிகப்படியான கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக வகுப்பில் ஒரு நாளுக்கு 50 சதவிகித மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, மாணவர்களை இரண்டு தனிப்பட்ட குழுக்களாகப் பிரித்து, முதல் குழு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் இரண்டாவது குழு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் பள்ளிக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்யவேண்டும். ஆசிரியர்களும் இந்த இரண்டுக்குக் குழுக்களுக்கு ஏற்றாற்போல் பணிக்கு வரவேண்டும். மேலும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதற்கு முன்பாகவே ஸ்லாட் ஒதுக்கப்பட்டு அதற்கு உரிய நேரத்தில்தான் செல்ல வேண்டும்.ரூல் 3 - பெற்றோர் பெர்மிஷன் : பள்ளிக்கு வருவதற்கு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ ஒப்புதல் வாங்குவது முக்கியம். மேலும், ஆன்லைன் அல்லது தொலைதூர கல்வி முறை எந்தவிதத் தடையுமின்றி தொடரும்.
ரூல் 4 - இடைவெளி அவசியம் : வகுப்பறைகளில் இருக்கை ஏற்பாடுகளைச் செய்யும்போது குறைந்தபட்சம் 6 அடி தூரம் இடைவெளியைக் கடைப்பிடிப்பது அவசியம். அவற்றை 'வட்டம்' போன்ற குறியீடுகளை அமைத்து, குறிப்பிட்ட அந்த இடத்தைவிட்டு வெளிவராதபடி இருக்கவேண்டும். வானிலை கைகொடுக்கும் வகையில் இருந்தால், ஆசிரியர்-மாணவர் கலந்துரையாடல்களைப் பள்ளியின் வெளிப்புற இடங்களில் நடத்திக்கொள்ளலாம்.
ரூல் 5 - விளையாட்டுக்குத் தடா : காலை மற்றும் மாலையில் நடைபெறும் அசெம்பிளி, விளையாட்டு வகுப்புகள் அல்லது நிகழ்ச்சிகள் போன்றவற்றை முற்றிலும் தவிர்க்கவேண்டும். நீச்சல் குளம் இருந்தால், நிச்சயமாக அதனை மூடவேண்டும்.
ரூல் 6 - கிருமி நீக்கம் கட்டாயம் : பள்ளிகள் திறப்பதற்கு முன்பு, ஒரு சதவீதம் சோடியம் ஹைப்போ குளோரைட் சொல்யூஷன் கொண்டு, நாற்காலிகள், கதவு, ஜன்னல், கைப்பிடிகள் உள்ளிட்ட உபகரணங்கள் முதல் வளாகம் வரை பள்ளியை முழுமையாகக் கிருமி நீக்கம் செய்திருக்கவேண்டும். மேலும், வளாகத்தில் உள்ள அனைவரும் முகமூடி அல்லது மாஸ்க் அணிந்திருக்கிறார்களா என்பதைப் பள்ளியின் முதன்மை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும்.
ரூல் 7 - சுத்தம் நல்லது : பள்ளி வளாகத்திற்குள் நுழையும் அனைவர்க்கும் 'தெர்மல் ஸ்க்ரீனிங்' கட்டாயமாகச் செய்யப்பட வேண்டும். கழிப்பறைகளில் தடையற்ற தண்ணீர் வசதி, குழாய்களுக்கு அருகே சோப் மற்றும் சானிடைசர்கள் எப்போதும் இருக்கிறதா என்பதை உறுதி செய்வது நிர்வாகத்தின் கடமை. கழிப்பறைகளிலும் சமூக இடைவெளி பின்பற்றுவது அவசியம். ஆல்கஹால் கொண்ட சானிடைசர் ஒவ்வொரு நுழைவாயில் பகுதியிலும் இருப்பது அவசியம். அனைவரும் தங்களுடைய கைகளை நன்கு சுத்தம் செய்த பிறகுதான் வகுப்பிற்குள் நுழையவேண்டும். அதுமட்டுமின்றி,மாஸ்க் மற்றும் சானிடைசர்ஸ் எந்நேரமும் கிடைக்கும் அளவிற்குச் சேகரித்து வைத்திருக்கவேண்டும்.
ரூல் 8 - பயோமெட்ரிக் கூடாது : நிச்சயம் பயோமெட்ரிக் பயன்படுத்தக்கூடாது. அதற்கு மாற்றாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வேறு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
ரூல் 9 - ஏசி கட்டுப்பாடு : பள்ளிகளில் முடிந்தவரை ஏசி பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது நல்லது. தேவைப்படுமானால், மத்திய அரசு குறிப்பிட்டுள்ள 24 முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவில் மட்டுமே வெப்ப அளவு வைத்து உபயோகிக்கவேண்டும். ஜன்னல்களை மூடிவைப்பது பாதுகாப்பானதல்ல என்பதால், கதவு, ஜன்னல்கள் திறந்தபடி இருப்பது சிறந்தது. சுகாதாரத்துறை அவசர தொடர்பு எண்களை நிச்சயம் பள்ளியில் ஒட்டப்பட்டிருக்கவேண்டும்.
ரூல் 10 - சுய சுகாதாரம் : தும்மல் அல்லது இருமல் ஏற்பட்டால், உள்ளங்கையை விட முழங்கையை வைத்துத் தடுக்கலாம். அல்லது டிஷ்யூ பேப்பர், கர்ச்சீப் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தலாம். அதனைச் சரியான முறையில் அப்புறப்படுத்துதல் முக்கியம். உடல்நிலையில் சோர்வு ஏற்பட்டால், உடனடியாக ஆசிரியர்களுக்குத் தகவல் தெரிவிக்கவேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.