தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் குறித்து பள்ளிக் கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில் தமிழகத்தில் இருந்து அரசு பள்ளிகளில் படித்த 17,922 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இதில் 12,840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.
இதையும் படியுங்கள்: ஆண்டுக்கு ரூ. 15,000 உதவித்தொகை; எஸ்.பி.ஐ ஆஷா திட்டம் பற்றிய முழுத் தகவல்கள் இதோ…
இந்த நீட் தேர்வுக்கான முடிவுகள் கடந்த 7 ஆம் தேதி இரவு வெளியிடப்பட்டது. இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களில் 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய அரசுப் பள்ளி மாணவர்களில் 35 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் பெரும்பாலான மாவட்டங்களில் 20% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 7% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதேநேரம் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு எழுதிய 131 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது விழுப்புரம் மாவட்டம் 100% தேர்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதே போன்று விருதுநகர், நீலகிரி, சேலம், பெரம்பலூர், மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் தேர்வெழுதிய 172 பேரில் 104 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்தாண்டு, அரசு பள்ளி மாணவர்கள் 8,061 பேர் நீட் தேர்வு எழுதியதில், 1,957 பேர் தகுதி பெற்றனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 24% ஆகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil