நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி மகாகவி பாரதியாரின் 140வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் ஆளுநர் மாளிகை சார்பில் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பிறந்த நாள் கட்டுரைப் போட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியே போட்டிகள் நடைபெறும் என்றும் கட்டுரைப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் ஆளுநர் மாளிகை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பிறந்தநாள் கட்டுரைப் போட்டி குறித்து ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்தநாள் மற்றும் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மேனிலைப் பள்ளி மாணவா்களுக்கும், கல்லூரி/ பல்கலைக்கழக மாணவா்களுக்கும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இதன் மூலம், சுதந்திரப் போராட்டத்தில் பாரதியாரின் பங்களிப்பு குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும். கட்டுரைப் போட்டிகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனியே நடத்தப்படும். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள், ‘இந்திய விடுதலைப் போரில் மகாகவி பாரதியாரின் பங்கு’ என்ற தலைப்பில் தமிழிலும், ‘Contribution of Mahakavi Bharathiyar to Independence of India’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் கட்டுரைகளை அனுப்பலாம்.
தமிழ் கட்டுரைகளை mahakavibharatisch2021tamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், ஆங்கிலக் கட்டுரைகளை mahakavibharatisch2021eng@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும். கல்லூரி/பல்கலைக்கழக மாணவா்கள், ‘பாரதியாரின் கற்பனையில் பாரத தேசம்’ என்ற தலைப்பில் தமிழ் கட்டுரைகளையும், ‘India in the imagination of Mahakavi Bharathiyar’ எனற தலைப்பில் ஆங்கில கட்டுரைகளையும் அனுப்ப வேண்டும். தமிழ் கட்டுரைகளை mahakavibharaticol2021tamil@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், ஆங்கில கட்டுரைகளை mahakavibharaticol2021eng@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.
பள்ளி மாணவா்கள் 2,000 முதல் 2,500 வாா்த்தைகளுக்கு மிகாமலும், கல்லூரி மாணவா்கள் 3,500 முதல் 4,000 வாா்த்தைகளுக்கு மிகாமலும் தங்களது கட்டுரைகளை எழுதி அனுப்ப வேண்டும்.
கட்டுரைப் போட்டியில் பங்கேற்பவர்கள் ஜனவரி 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநா் ஆா்.சந்திரசேகரன் தமிழ் கட்டுரைகளையும், தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன் ஆங்கில கட்டுரைகளையும் மதிப்பீடு செய்து வெற்றியாளா்களை பரிந்துரைப்பார்கள்.
மேல்நிலைப் பள்ளி பிரிவில் தோ்வாகும் தமிழ் மற்றும் ஆங்கில கட்டுரைகளுக்கு தலா ரூ.1 லட்சமும், கல்லூரி பிரிவில் தோ்வாகும் கட்டுரைகளுக்கு தலா ரூ.2 லட்சமும் ஆளுநா் மாளிகையில் குடியரசு தினத்தன்று வழங்கப்படும்” என்று அளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”