Mega Job Fair in Namakkal: தமிழகத்தில் உள்ள வேலை தேடுவோர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாக, 10000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு வழங்கக் கூடிய வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக் கொள்ள இளைஞர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக அரசு படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாவட்டந்தோறும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. இந்த முகாம்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், மற்றுமொரு அரிய வாய்ப்பாக நாமக்கல் மாவட்டத்தில் வருகின்ற சனிக்கிழமை அன்று மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் கலந்துக் கொள்ளும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், அரசு துறைகளில் மட்டுமில்லாமல் தனியார் நிறுவனங்களில் உள்ள வேலைவாய்ப்பினை இளைஞர்கள் பெறும் வகையில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 21.09.2024 சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாபெரும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
தனியார் நிறுவனங்களின் இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி மற்றும் பொறியியல் படித்தவர்கள் வரை கலந்துகொள்ளலாம்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் சுமார் 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொள்ளுகின்றன. இந்த முகாம் மூலம் 10,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். மேலும், இலவசமாக திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு செய்து தரப்படும்.
நாமக்கல் மாவட்ட மல்லசமுத்திரம் மகேந்திரா பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. மேலும், முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்ல ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல், இராசிபுரம், நாமகிரிபேட்டை, திருச்செங்க்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய இடங்களில் இருந்து முகாம் நடைபெறும் இடத்திற்கு செல்ல காலை 8 மணிக்கு கல்லூரி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு முகாம் குறித்த மேலும் விவரங்களுக்கு 04286-222260, 6380369124 என்ற தொலைப்பேசி எண்ணுக்கும், jobfairnkl20222@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“