தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய குழு – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Tamilnadu govt form committee for NEET exam impacts: நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மாற்று திட்டங்கள், ஆகியவற்றுடன் சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

Neet exam, neet exam suicides, vellore students

தமிழகத்தில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்ய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு இதுவரை உருவாக்கிய பாதிப்புகள், அவற்றைச் சரிசெய்யும் வழிமுறைகள், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மாற்று திட்டங்கள், ஆகியவற்றுடன் சட்ட வழிமுறைகளை அரசுக்குப் பரிந்துரை செய்திடவும் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வில் தமிழகத்தில் தனியார் , அரசு பள்ளிகளில் நீட் தேர்வு எழுதியவர்கள் எத்தனை பேர்? அதில் எத்தனை பேர் வெற்றிபெற்றனர்? என்பது போன்ற 5 ஆண்டு புள்ளிவிவரங்களை சேகரித்து இந்தக் குழு அறிக்கை சமர்பிக்கும். விரிவான அறிக்கை பெறப்பட்ட பிறகு அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து வெளியிடப்படும்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ”மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தமிழ் வழியில் கல்வி பயில்வோர் போன்ற நம் சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வரும் நிலை உள்ளதாக கல்வியாளர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சமூக நீதிக்கு எதிரான இந்த நீட் தேர்வு முறை கைவிடப்பட வேண்டும் என்றும், தலைவர் கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே மருத்துவக் கல்லூரி இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி அதற்கான பல கட்டப் போராட்டங்களைத் தமிழக அரசு தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.

இந்த நீட் தேர்வு முறை, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்குக் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா என்பது குறித்தும், அவ்வாறு பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைச் சரிசெய்யக்கூடிய மாற்று திட்டம், நீட் தேர்வைத் தவிர்த்து மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான மாற்று முறைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் அவற்றுக்கான சட்ட வழிமுறைகள் பற்றியும் முழுமையாக ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் குழு செயல்படும் காலம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. குழுவின் தலைவரான நீதிபதி ராஜன் இதற்கு முன் நீதிபதியாக இருந்தபோது பல சிறப்பான தீர்ப்புகளை வழங்கியவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற தீர்ப்பை வழங்கியவர் இவரே. இவர் சட்டத்துறைச் செயலராக இருந்தபோது மெட்ராஸ் என்பதை சென்னை என மாற்றியது, ஈவ் டீசிங் தொடர்பான சட்டம் போன்றவை இவர் கொண்டுவந்த சட்டங்களாகும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu govt form committee for neet exam impacts

Next Story
தென்னக ரயில்வேயில் 3,322 அப்ரெண்டிஸ் பணியிடங்கள்; ஐ.டி.ஐ முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com