ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறும் அரசுப்பள்ளி மாணவர்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தொழில்நுட்ப கழகம் (ஐ.ஐ.டி), இந்திய அறிவியல் கழகம் (ஐ.ஐ.எஸ்சி), அனைந்திந்திய மருத்துவ கழகங்கள் (எய்ம்ஸ்) போன்ற புகழ் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப் பெறும் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் பயின்றுள்ள மாணக்கர்களுக்கு அவர்களின் படிப்புச் செலவிற்கான முழுத்தொகையையும் அரசே ஏற்கும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது மாணவர்களின் படிப்புச் செலவிற்கான முழுத் தொகையினையும் மாநில அரசு வழங்குவது தொடர்பான நிபந்தனை மற்றும் நெறிமுறைகளை வகுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: மாணவர்களின் தற்கொலைகள் 5 ஆண்டுகளில் அதிகரிப்பு; தமிழகம் மூன்றாம் இடம்
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், "இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு, இந்திய தொழில்நுட்ப கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்றிருக்க வேண்டும்.
மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப்பெற்ற மாணாக்கர்கள், அந்நிறுவனங்களில் சேர்வதற்காகக் கலந்து கொண்ட நுழைவுத்தேர்வில் எடுத்த மதிப்பெண் பட்டியல், சேர்க்கை ஆணை, 'கல்வி' நிறுவனத்தின் தலைவரால் வழங்கப்படும் உண்மைச் சான்றிதழ் (Bonafide Certificate) மற்றும் அக்கல்வி நிறுவனங்களில் வசூலிக்கப்படும் அனைத்து கட்டண விவரங்களுடன், அம்மாணக்கர்களின் சொந்த மாவட்ட ஆட்சித்தலைவரின் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சித்தலைவர், விண்ணப்பித்த மாணாக்கர்களின் அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்த்து மேற்படி உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைப்பெற்ற மாணாக்கர்களின் படிப்பிற்காக ஆகும் மொத்த செலவின் விவரங்களுடன், தொழில்நுட்பக்கல்வி இயக்ககத்திற்கு பரிந்துரை செய்து கருத்துரு (Proposal) அனுப்பவேண்டும்.
மேற்படி சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரிடமிருந்து பெறப்படும் பரிந்துரையினை ஆராய்ந்து, உயர்கல்விக்காக ஆகும் செலவினத்தினைக் கணக்கீடு செய்து உரிய நிதி ஒதுக்கீடு ஆணையைப் பிறப்பிக்கக்கோரி தொழிநுட்ப கல்வி இயக்ககம் அரசுக்கு கருத்துரு அனுப்பவேண்டும்.
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பயிலுவதை ஊக்குவிப்பதற்காக சாதிப் பாகுபாடின்றியும், ஆண்டு வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலும், அம்மாணாக்கர்களின் விவரங்கள், மாவட்ட ஆட்சித்தலைவரின் பரித்துரை மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கருத்துருவினை ஆய்வு செய்து நன்றாக பரிசீலித்து, முதலாம் ஆண்டிலேயே நான்கு ஆண்டுகளுக்கான செலவினத் தொகைக்கு நிர்வாக ஒப்புதலை அளித்தும், முதலாம் ஆண்டிற்கான செலவினை ஒப்பளிப்பு செய்தும் அரசால் ஆணை வெளியிடப்படும். அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான கருத்துருவினை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் பெற்று தொழில்நுட்ப கல்வி ஆணையரே அம்மாணவருக்கு ஒவ்வொரு ஆண்டுக்குமான செலவினை வழங்கலாம்.
7.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெறும் அரசுப்பள்ளி மாணாக்கர்களுக்கு, அவர்களுக்கான செலவினத்தொகை அவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கு மின்னணு சேவை மூலமாக (ECS) ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இந்நேர்விலும், ஒவ்வொரு மாணவருக்கும் அவர் படிப்புச் செலவிற்கான காசோலையினைப் பெற்று மாவட்ட ஆட்சித்தலைவர் வழியாக சம்மந்தப்பட்ட மாணவருக்கு வழங்குவதற்குப் பதிலாக, நேரடியாக சம்மந்தப்பட்ட மாணவரின் வங்கி கணக்கிற்கு மின்னணு சேவை மூலமாக (ECS) தொழில்நுட்பக் கல்வி ஆணையரால் ஒப்பளிக்கப்பட்ட தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்துவதற்காகவும் சரிபார்த்தலை விரைவாக முடிப்பதற்கும், வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவதற்கும் ஒரு இணைய தளம் (Onine Portal) தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தால் ஏற்படுத்தப்படும்.
இவ்வாறு, தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.