தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 10, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மதிப்பெண்கள், 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீட்டு மதிப்பெண்களைக் கொண்டு இறுதி மதிப்பெண்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலையில், இணைய வழி கற்றல் மூலம் மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். மேலும் பொதுத் தேர்வுகளையும் நடத்த முடியாததால் சிபிஎஸ்இ உள்ளிட்ட மாநில பாடதிட்ட பொதுத் தேர்வுகள் ரத்துச் செய்யப்பட்டன. பல்வேறு மாநிலங்களும் தங்களது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்தன.
தமிழகத்திலும் இதேபோல், கொரோனா பரவல் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதனையடுத்து மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை நிர்ணயிக்க குழு ஒன்றை அமைத்தது தமிழக அரசு.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன், உச்சநீதிமன்றத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக தொடரப்பட்ட பொது நல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து மாநிலங்கள், மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை 10 நாட்களுக்குள் நிர்ணயிக்க வேண்டும் எனவும், மேலும் தேர்வு முடிவுகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
தற்போது தமிழக அரசால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை அரசிடம் அளித்துள்ளது. அந்த அறிக்கையில்,
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக 2020-2021 கல்வியாண்டில் நடக்கவிருந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர், பள்ளி தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அரசுக்கு தனது அறிக்கையை அளித்துள்ளது.
10 மற்றும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 12 ஆம் வகுப்புக்கான இறுதி மதிப்பெண்களைக் கீழ்கண்ட விகிதாச்சார அடிப்படையில் வழங்க வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது.
அதன்படி, 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், உயர் மதிப்பெண் பெற்ற மூன்று பாடங்களுடைய சராசரியின் 50%, 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், ஒவ்வொரு பாடத்திலும் பெற்ற எழுத்து முறை மதிப்பெண்களில் 20%, மற்றும் 12ஆம் செய்முறைத் தேர்வு மற்றும் அக மதிப்பீடு மதிப்பெண்களில் 30%, ஆகியவற்றைக் கொண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி மதிப்பெண்கள் வழங்கப்படும்.
12ஆம் வகுப்பில் ஒவ்வொரு பாடத்திலும் செய்முறைத் தேர்வு (20) மற்றும் அக மதிப்பீட்டில் (10) என மொத்தம் 30 க்குப் பெற்ற மதிப்பெண் முழுவதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
செய்முறைத் தேர்வு இல்லாத பாடங்களில் அக மதிப்பீட்டில் (10) பெற்ற மதிப்பெண் 30 மதிப்பெண்களுக்காக மாற்றப்பட்டு முழுவதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 11 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் இரண்டிலும் பங்குபெற இயலாத மாணவர்களுக்கு அவர்களின் 10 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் 12 ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு மதிப்பெண் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு 11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வில் ஏதேனும் பாடங்களில் தோல்வி அடைந்திருந்தாலோ, தேர்வு எழுத இயலாத நிலை இருந்தாலோ, அம்மாணவர்களுக்கு தற்போது அத்தேர்வுகளை மீண்டும் எழுத வாய்ப்பு இல்லாத நிலையைக் கருத்தில் கொண்டு, 35 விழுக்காடு மதிப்பெண் வழங்கப்படும்.
11 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வு, அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு மற்றும் 12 ஆம் வகுப்பு அக மதிப்பீடு, செய்முறைத் தேர்வு ஆகிய தேர்வு நிலைகளில் ஒன்றில் கூட கலந்து கொள்ளாத மாணவர்கள் தனித் தேர்வர்களாகத் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.
ஒவ்வொரு மாணவருடைய மதிப்பெண்ணும் மேற்கூறிய முறைகளில் கணக்கிடப்பட்டு, உச்சநீதிமன்ற ஆணைப்படி ஜூலை 31 ஆம் தேதிக்குள் அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்படும்.
இம்மதிப்பீட்டு முறையில் கணக்கிடப்படும் மதிப்பெண்கள் தமக்குக் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்களுக்கு அவர்கள் விரும்பினால் 12 ஆம் வகுப்பு எழுத்துத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படும். அவ்வாறு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்ணே அவர்களது இறுதி மதிப்பெண்ணாக அறிவிக்கப்படும்.
தனித் தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சீரடைந்தவுடன், மேற்குறிப்பிட்டோருடன் சேர்த்து தக்க சமயத்தில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்விற்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.