scorecardresearch

ஆவின் நிறுவனத்தில் 322 காலியிடங்கள்; டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்ப தமிழக அரசு அறிவிப்பு

ஆவின் நிறுவனத்தில் காலியாக மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய 26 வகையான 322 காலிப் பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்படும் என பால்வளத்துறை ஆணையர் அறிவிப்பு

aavin jobs
ஆவின் வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் காலியாக உள்ள 322 பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி மூலம் நிரப்பப்படும் என ஆவின் அறிவித்துள்ளது.

கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை, சென்னையில் உள்ள ஆவின் தலைமையகம் மற்றும் திருப்பூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, தஞ்சாவூர், நாமக்கல், விருதுநகர், திருச்சி, தேனி பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள் ஆகியவற்றில் 236 பேர் நேரடியாகப் பணியில் அமர்த்தப்பட்டனர்.

இதையும் படியுங்கள்: சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 30 பணியிடங்கள்; 8-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

மேலாளர்கள் (கணக்கு, விவசாயம், பொறியியல், தீவனம், பால்பண்ணை மற்றும் தரக்கட்டுப்பாடு) மற்றும் துணை மேலாளர்கள் (கணினி, பால்வளம் மற்றும் சிவில்), தொழில்நுட்பவியலாளர்கள் (குளிர்பதனம் மற்றும் கொதிகலன்), இளநிலைப் பொறியாளர்கள், தொழிற்சாலை உதவியாளர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணியிடங்களில் இவர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்தப் பணியிடங்களில் தகுதியில்லாத பலரும் நியமனம் செய்யப்பட்டு, விதிகளை மீறி வேலை வழங்கப்பட்டதாக ஆவின் நிர்வாகத்துக்குப் புகார் வந்தது. இந்தப் புகார்களின் அடிப்படையில் 2021 ஜூலையில், அப்போதைய ஆவின் நிர்வாக இயக்குநர் கே.எஸ்.கந்தசாமி தலைமையிலான குழுவினர், பணி நியமன முறைகேடு தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், விதிமுறைகளை மீறி பணியில் சேர்ந்ததாக, மேலாளர்கள், துணைமேலாளர்கள் உள்ளிட்ட 236 பேர் கடந்த ஜனவரி மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே, 2021 -22ஆம் ஆண்டு மனிதக் கோரிக்கையின் போது, ​​ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான பதவியிடங்கள், அரசின் ஆணையைப் பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நடத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் மு. நாசர் அறிவித்தார்.

இந்தநிலையில், ஆவின் நிறுவனத்தில் காலியாக மேலாளர், துணை மேலாளர், தொழில்நுட்ப வல்லுநர் ஆகிய 26 வகையான 322 காலிப் பணியிடங்கள் TNPSC மூலம் நிரப்பப்படும் என பால்வளத்துறை ஆணையர் அறிவித்துள்ளார். மேலும், இந்தப் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் TNPSCக்கு பால்வளத்துறை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். இதனால் இந்தப் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு டி.என்.பி.எஸ்.சி மூலமாக விரைவில் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu govt says tnpsc will fill 322 various jobs in aavin