தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் பி.எட் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு கல்வியியல் கல்லூரிகளில் மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் நடப்பு கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு நேற்று 16 ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tngasa.in என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் செப்டம்பர் 26 ஆம் தேதி ஆகும். இதைத்தொடர்ந்து 30 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, அக்டோபர் 14 முதல் 19 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். முதலாம் ஆண்டுக்கான வகுப்பு 23 ஆம் தேதி தொடங்கும்.
இதற்கிடையே, நடப்பு கல்வி ஆண்டில் பி.எட் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்ணுடன் பட்டம் பெற்றவர்கள் பி.எட் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் பி.சி, பி.சி-முஸ்லிம் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்ணும், எம்.பி.சி, டி.என்.சி வகுப்பினர் 43 சதவீத மதிப்பெண்ணும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருந்தால் போதுமானது.
மேலும், 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். அதேநேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ் 2 படிக்காமல் நேரடியாக பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க இயலாது.
பட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கும்போது முதுகலை பட்டதாரிகள் என்றால் கூடுதலாக 4 மதிப்பெண்ணும் எம்.பில் முடித்திருந்தால் 5 மதிப்பெண்ணும் பி.எச்.டி-யாக இருப்பின் 6 மதிப்பெண்ணும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக வழங்கப்படும்.
மேலும், கல்லூரியில் படிக்கும்போது என்.எஸ்.எஸ் மற்றும் என்.சி.சி-யில் இருந்திருந்தாலோ, விளையாட்டு வீரர்களாக இருந்தாலோ கூடுதலாக 3 மதிப்பெண் வெயிட்டேஜ் மதிப்பெண்ணாக அளிக்கப்படும். இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“