/tamil-ie/media/media_files/uploads/2022/10/tamil-nadu-schools-1604658347.jpg)
தமிழகம் முழுவதும் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி நிறைவடைந்தது. இதனையடுத்து விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே 8 வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளின்படி தமிழகத்தில் மொத்த தேர்ச்சி விகிதம் 95.03 ஆக இருந்தது. இந்த ஆண்டும் வழக்கம்போல் மாணவிகளே முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவீதமும், மாணவர்கள் 93.16 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தற்காலிக மதிப்பெண் பட்டியல் இன்று (மே 12) வெளியிடப்பட்டது. காலை 11 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தற்காலிக சான்றிதழ் பதிவிறக்கம் செய்யப்பட்டன. அதில், தலைமையாசிரியர் பள்ளியின் முத்திரையுடன் கையெழுத்திட்டு மாணவர்களுக்கு வழங்கினார். இந்த தற்காலிக மதிப்பெண் பட்டியலை மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் தேர்வுத் துறை இணையதளமான www.dge.tn.gov.in என்ற முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கிடையில், 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் பெற நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மேலும், மாணவ, மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும் நாளை மே 13 ஆம் தேதி முதல் வருகிற 17 ஆம் தேதி வரை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெற தாள் ஒன்றுக்கு ரூ. 275 கட்டணம் செலுத்த வேண்டும். விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைக் கொண்டே முடிவுகளை அறிய இயலும். விடைத்தாள் நகல்கள் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டதும் மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த நகலைப் பெற்ற பின்னர் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.