தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 50,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அதற்கான காரணங்களாக 2 பொதுத் தேர்வுகளால் ஏற்பட்ட நெருக்கடி என்று தெரியவந்துள்ளது.
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 13 ஆம் தேதி தொடங்கியது. முதலில் தமிழ் தாள் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கிட்டத்தட்ட 49000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட் ஆகினர். அடுத்ததாக நடைபெற்ற ஆங்கிலத் தாள் தேர்வில் 50000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்குச் செல்வதைத் தேர்ந்தெடுக்கும் முக்கிய தேர்வான பொதுத் தேர்வை மாணவர்கள் எழுத வராததற்கு காரணம் என்ன என கேள்வி எழுந்தது. இந்தநிலையில், தற்போது அதற்கான காரணங்கள் வெளிவந்துள்ளன.
இதையும் படியுங்கள்: 50,000 மாணவர்கள் தேர்வு எழுத வராதது ஏன்? ஆசிரியர் கொடுக்கும் விளக்கம்
தமிழ் தாள் தேர்வு எழுத வராத மாணவர்களே, ஆங்கில தாளையும் எழுத வரவில்லை. இவர்கள் அத்தனை பேரும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்கள். 11 ஆம் வகுப்பில் தோல்வியடைந்தவர்கள், அந்த பாடங்களையும் சேர்த்து 12 ஆம் வகுப்பில் எழுதலாம். இதனால் மாணவர்களுக்கு இரட்டை சுமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பொதுத் தேர்வு எழுத வராத இந்த மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கே வராதவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. 3 மாதங்களுக்கு மேல் பள்ளி வராதவர்களின் பெயர் வருகைப் பதிவேட்டில் இருந்து நீக்கப்படும் நிலையில், தொடர்ந்து 8 மாதங்களாக பள்ளிக்கு வராதவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கல்வித் துறையின் எமிஸ் இணையதளத்திலும் நீக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்வி நலத்திட்ட உதவிகள் எங்கே சென்றது என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போதைய தேர்வுக்கு 50000 விடைத் தாள்கள் அச்சிடப்பட்டு, அவை பயன்படுத்தாததால் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஆங்கில தேர்வுக்கு பிறகு, தேர்வு எழுத வராதவர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதை பள்ளிக் கல்வித்துறை நிறுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil