2024 ஆம் ஆண்டிற்கான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க மத்திய அரசு மறுத்துவிட்டதால், இந்த கல்வியாண்டில் அன்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 50 கூடுதல் எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு மாணவர்களை சேர்க்க முடியாது என்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங் கமிட்டி தெரிவித்துள்ளது.
அக்டோபர் 23 அன்று, அன்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மேலும் 50 மாணவர்களைச் சேர்க்க அனுமதி பெற்றதாக அறிவித்தது, இதனையடுத்து அந்தக் கல்லூரியின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.
இதனையடுத்து மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கலந்தாய்வுக்கான காலக்கெடுவை நீட்டிக்க அனுமதி கோரி கடந்த வாரம் தமிழக மருத்துவ கவுன்சலிங் கமிட்டி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. ஆனால் மத்திய அரசு காலக்கெடுவை நீட்டிக்க மறுத்துவிட்டது. இதனால் இந்தக் கல்வியாண்டில் கூடுதலாக கிடைத்த 50 எம்.பி.பி.எஸ் இடங்களை நிரப்ப முடியவில்லை.
இறுதிச் சுற்றில் சீட்களை மேம்படுத்த மாணவர்களுக்கு விருப்பம் இல்லாததால், இறுதி சுற்றில் புதிய இடங்களைச் சேர்ப்பது சாத்தியமில்லை என்று சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
”மேம்படுத்துவதற்கான விருப்பத்தை வழங்காமல் புதிய இடங்களை சேர்ப்பது தகுதியின் நோக்கத்தை தோற்கடிக்கும். இந்தச் சுற்றில் தரம் உயர்த்த அனுமதிக்கும் போது, மற்ற கல்லூரிகளிலும் காலியிடங்களை உருவாக்கும். எனவே, இருக்கைகளை நிரப்ப, ஒரு சிறப்பு சுற்று தேவை. இதை இறுதி காலியிட சுற்றில் செய்ய முடியாது, அங்கு மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையை எடுக்கவில்லை என்றால், அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்," என்று மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இதனிடையே அக்டோபர் 24 ஆம் தேதி தொடங்கிய இறுதி சுற்று, மருத்துவ மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் 296 காலி இடங்களைக் கொண்டிருந்தது. இதில் அரசுக் கல்லூரிகளில் ஒரு எம்.பி.பி.எஸ் இடமும், 23 பி.டி.எஸ் இடங்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 67 எம்.பி.பி.எஸ் இடங்களும், தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களில் 61 எம்.பி.பி.எஸ் இடங்களும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் நான்கு பி.டி.எஸ் இடங்களும், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 136 இடங்களும் அடங்கும்.
தகுதியானவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கு 5 லட்சமும், பி.டி.எஸ் படிப்புக்கு 2 லட்சமும் கூடுதல் பாதுகாப்பு வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்று கவுன்சலிங் கமிட்டி கூறியது. ஒதுக்கீட்டிற்குப் பிறகு விண்ணப்பதாரர் படிப்புகளில் சேரவில்லை என்றால் தொகை திரும்பப் பெறப்படாது. ஒதுக்கீட்டிற்குப் பிறகு படிப்புகளில் சேரவில்லை என்றால், பாதுகாப்பு வைப்புத்தொகைக்கு கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் படிப்புக் கட்டணம் மற்றும் இடைநிறுத்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும், மேலும் அவர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான கவுன்சிலிங்கிலிருந்து தடை செய்யப்படுவார்கள்.
"சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டதால், காலக்கெடுவை ஒரு நாள் நீட்டிக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் விரும்பினர். இதனையடுத்து செவ்வாய்கிழமை கவுன்சலிங் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு பதிலாக, புதன்கிழமை வெளியிடப்படும்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“