தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகள் முடிவடைந்து, மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்து வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேநேரம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: தமிழக கல்விக் கொள்கை உருவாக்க 2 புதிய உறுப்பினர்கள் நியமனம்: அன்பில் மகேஷ் அறிவிப்பு
இதனிடையே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா என மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.
இந்தநிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் பள்ளிகள் நிச்சயம் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதிபட தெரிவித்துள்ளார். இதனால், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 1 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 5 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, பள்ளிகள் திறப்பிற்கான ஏற்பாடுகளும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் செய்யப்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட் புத்தகங்கள் உள்ளிட்ட பல வகையான பொருட்கள் வழங்குவதற்கான பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil