தமிழகத்தில் பிளஸ் டூ மாணவர்களுக்காக பொதுத்தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று உயிரியல் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வினாத்தாள் எப்படி இருந்தது என்பது குறித்து மாணவர்கள் தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கியது. வரும் மார்ச் 22-ந் தேதி வரை நடைபெற உள்ள இந்த தேர்வுகள் அனைத்தும் காலை 10:15 முதல் மதியம் 1:15 வரை நடைபெறும். தமிழகம் முழுவதும் 3,302 மையங்களில் நடத்தப்படும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை, தமிழகம் முழுவதும் 7.25 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
முதல் 2 நாட்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என மொழிப்படங்களுக்கான தேர்வு நடைபெற்றதை தொடர்ந்து, 8-ந் தேதி பயோ வேதியியல், மற்றும் கம்பியூட்டர் சையின்ஸ் உள்ளிட்ட 11 பாடங்களுக்கான தேர்வு நடைபெற்ற நிலையில், 11-ந் தேதி வேதியியல், கணக்கியல் மற்றும் மண்ணியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மார்ச் 15 இயற்பியல், வணிகவியல், கம்பியூட்டர் டென்னாலஜி உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
தொடர்ந்து இன்று பயாலஜி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் வினாத்தாள் எப்படி இருந்தது என்பது குறித்து மாணவர்கள் கருத்து வெளியாகியுள்ளது. அதன்படி பயாலஜி தேர்வில், ஒரு மதிப்பெண் வினாக்களில் 3 வினாக்கள் புத்தகத்தின் பாடப்பகுதியின் உள் இருந்து கேட்கப்பட்டுள்ளது, பாடத்தின் பின்பக்கத்தில் இருக்கும் வினாக்கள் கேட்கப்படாததால், உள் பாடத்தை படிக்காத மாணவர்களுக்கு இந்த கேள்விகள் சற்று கடினமாக இருந்துள்ளது.
தாவரவியல் மற்றும் விலங்கியல் வினாத்தாள்களில் தலா 8 ஒரு மதிப்பெண் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளது. இந்த வினாக்களில் சாய்ஸ் இல்லை என்பது மாணவர்களுக்கு சற்று சிரமமாக இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2, 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் பெரிய சிரமம் இல்லாமல் படித்த அனைவரும் எழுதும் வகையில் சற்று எளிமையாக இருந்துள்ளது. புத்தகத்தின் உள் இருந்து கேட்டிருந்தாலும் எளிமையாக பதில் எழுதும் வகையில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது.
இதன் மூலம் பயாலஜி தேர்வில் மாணவர்கள் ஓரளவு நல்ல மதிப்பெண்களை எதிர்பார்க்கலாம். பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் தேர்வு மட்டும் சற்று கடினமாக இருந்த நிலையில், கணிதம், உயிரியல், வேதியியல் உள்ளிட்ட தேர்வுகள் சற்று எளிமையாக இருந்ததால், சி.பி.எஸ்.இ மாணவர்களை ஒப்பிடும் போது ஸ்டேட்போர்டு மாணவர்கள் கட்ஆப் மதிப்பெண்கள் அதிகம் இருக்க வாய்ப்புள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“