Tamilnadu police recruitment announcement will be soon: தமிழ்நாடு காவல்துறையில் புதிதாக சுமார் 10,000 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்பது பலருக்கு கனவு; பெருமையான விஷயம். காக்கிச்சட்டை உடுத்துவது பலருக்கு கனவு; அந்த கனவை நனவாக்க தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரை காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள காவலர் பணியிடங்கள் சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் அவ்வப்போது காவலர் பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது.
இந்தநிலையில், தமிழக காவல் துறையில் நிலவும் காவலர் பற்றாக்குறை காரணமாக காவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை தொடர்ந்து இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதனால் விரைவில் சுமார் 10000 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2021 ஜூன் 30ஆம் தேதி நிலவரப்படி தமிழக காவல் துறைக்கு 1,33,198 காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என அரசால் தெரிவிக்கப்பட்டது. அப்போது 1,18,881 பேர் மட்டுமே பணியில் இருந்தனர். இதற்கிடையில், காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முதல் கட்டமாக 11,813 பேரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு 2020ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.
இப்பணிகளுக்காக 5.50 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில் 4.91 லட்சம்பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர். அதில் தேர்ச்சி பெற்றவர்கள் விவரத்தை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் கடந்த ஆண்டு பிப்ரவரி 19 ஆம் தேதி வெளியிட்டது. 1:5 என்ற விகிதத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அசல் சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு, உடற்திறன் போட்டி ஆகியவை கடந்த ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்கள் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்வு தேதி மாற்றப்பட்டது.
கொரோனா இரண்டாவது அலை படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டதை அடுத்து சான்றிதழ் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடல் தகுதி தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 26ஆம் தேதி முதல் நடைபெற்றது. அனைத்து தேர்விலும் வெற்றி பெற்ற 10,391 பேருக்கு அடுத்த மாதம் முதல் 8 மாதம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடிந்த பிறகு, தமிழக காவல் துறையில் முறைப்படி அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
இந்நிலையில், தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைக் காவலர்கள், தீயணைப்பு படை வீரர்கள் என சுமார் 10 ஆயிரம் பேரை புதிதாக தேர்வுசெய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே போல சுமார் 450 காவல் உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படும் இளைஞர்கள் தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.