தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு (FePSA), தமிழக அரசு முந்தைய இரண்டு ஆண்டுகளுக்கான நிலுவைத் தொகையை செலுத்தும் வரை, 2023-24 ஆம் ஆண்டிற்கு கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்று அறிவித்தது.
தனியார் பள்ளிகள் ஒவ்வொரு ஆண்டிலும் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இடங்களை கல்வி உரிமைச் சட்டம் வாயிலாக சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அந்த வகையில், கடந்த ஆண்டு, பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்த 74,283 மாணவர்களை இந்த சட்டத்தின் கீழ் பள்ளிக் கல்வித்துறை சேர்த்தது. முந்தைய ஆண்டை விட 2022-23ல் சேர்க்கை 31% அதிகரித்துள்ளது.
இதையும் படியுங்கள்: “தமிழகத்தின் கல்விக்கொள்கை தனித்துவம் வாய்ந்ததாக இருக்கும்”- ஜவகர் நேசன்
இதற்கான கட்டணத்தை அரசே சம்பந்தப்பட்ட தனியார் கல்லூரிகளுக்கு வழங்கும். அந்த வகையில் RTE சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கட்டணமாக ஒவ்வொரு ஆண்டும் 400 கோடிக்கும் அதிகமான தொகையை தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு திருப்பி அளித்து வருகிறது.
இந்தநிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கான கட்டணத்தை மாநில அரசு வழங்கவில்லை என தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளிகளின் இயக்குநரிடம் அளித்த மனுவில், RTE சட்டத்தின் கீழ் 25 சதவீத மாணவர்களின் கட்டணம் நிலுவையில் உள்ளதால், தனியார் பள்ளிகள் இயங்க முடியாமல் திணறி வருகின்றன. மாநில அரசு பள்ளிகளுக்கான மின் கட்டணம், சொத்து வரி, வைப்புத் தொகை, ஆய்வுக் கட்டணம் ஆகியவற்றை உயர்த்தியுள்ளது. ஆனால் எங்கள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. குறைந்தபட்சம் பள்ளிகளுக்கு வரி மற்றும் மின் கட்டணம் செலுத்த அரசு கால அவகாசம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், 2022-23 ஆம் ஆண்டிற்கான RTE சேர்க்கை ஆவணங்களை ஆய்வு செய்ய பள்ளிக் கல்வித் துறை இன்னும் அதிகாரிகளை அனுப்பவில்லை என்றும், மே மாதத்திற்கு முன் பள்ளிகளுக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தநிலையில், ”கட்டணம் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பல பள்ளிகள், கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தத் தொடங்கியுள்ளன. RTE இன் கீழ் மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்று தனியார் பள்ளிகள் கூற முடியாது. ஆனால், பெற்றோருக்கு சிரமத்தைத் தவிர்க்க, கட்டணத்தை விரைவாக வழங்குவதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்,” என தமிழ்நாடு மாணவர் பெற்றோர் நலச் சங்கம் கூறியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "முந்தைய ஆண்டுக்கான கட்டணத்தை திருப்பிச் செலுத்த, தனியார் பள்ளிகளின் கணக்குகளை சரிபார்க்கத் தொடங்கினோம். இருப்பினும், 2022-23 ஆம் ஆண்டுக்கான கட்டணம் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீட்டிற்குப் பிறகுதான் திருப்பிச் செலுத்தப்படும்," என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil