டி.என்.பி.எஸ்.சி நடத்திய நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் பணிகளுக்கான போட்டித் தேர்வில் ஒரே மையத்தில் படித்து தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது ஐயத்தை ஏற்படுத்துவதால், விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6-ம் தேதி நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் என மொத்தம் 1,339 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவித்தது. தமிழகத்தில் இந்த தேர்வை 29 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.
தமிழ்நாடு அரசு துறைகளுக்கான அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் பணிகளுக்கான இந்த தேர்வில் ஐ.டி.ஐ, டிப்ளமோ சிவில், பி.இ சிவில் மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.
இதில் காரைக்குடி ஸ்ரீராம் நகரில் இருக்கும் பிரமிடு என்ற தனியார் பயிற்சி நிறுவனத்தை சேர்ந்த 4 ஆயிரம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் பிரமிடு பயிற்சி மையத்தை சேர்ந்த 742 மாணவர்கள் நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் பணியிடங்களில் தேர்ச்சி பெற்றனர்.
குறிப்பாக, காரைக்குடியில் 13 பயிற்சி மையங்களில் தேர்வு எழுதிய பிரமிடு பயிற்சி மையத்தைச் சேர்ந்த 302 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே போல, தமிழகம் முழுவதும் உள்ள மையங்களில் தேர்வு எழுதி இந்த பயிற்சி மையத்தைச் சேர்ந்த 742 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரே மையத்தில் பயிற்சி பெற்ற 742 தேர்ச்சி பெற்றிருப்பது வியப்பையும் ஐயத்தையும் எழுப்பியுள்ளது.
இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தமிழ்நாடு நில அளவையர், வரைவாளர், உதவி வரைவாளர் பணிகளுக்கு நடத்திய போட்டித் தேர்வில் ஒரே மையத்தில் படித்து தேர்வு எழுதிய 700 பேர் தேர்ச்சி பெற்றிருப்பது ஐயத்தை ஏற்படுத்துகிறது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட த.நா.அ.ப.தே (டி.என்.பி.எஸ்.சி) போட்டித்தேர்வில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய ஏறக்குறைய 700 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வாய்ப்பில்லாத இந்த சாதனை ஐயத்தை ஏற்படுத்துகிறது.
மொத்தமாக தேர்ச்சி பெற்ற 700 பேரும் காரைக்குடியில் உள்ள நடுவத்தில் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களின் பெரும்பான்மையினர் காரைக்குடியில் உள்ள தனியார் பயிற்சி நடுவத்தில் பயிற்சி பெற்றவர்கள் என்பது ஐயத்தின் அளவை உயர்த்தியிருக்கிறது.
வெற்றி பெற்றவர்கள் முறையாக பயின்று திறமையால் தேர்வில் வெற்றி பெற்றிருந்தால் மகிழ்ச்சி தான். ஆனால், மொத்த பணியிடங்களில் 70% இடங்களுக்கு ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது இயற்கைக்கு எதிரானது என்பதால் அது குறித்த உண்மைகள் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும்.
2018-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட நான்காம் தொகுதி தேர்வில் முதல் 100 இடங்களில் இராமேசுவரம், கீழக்கரை நடுவங்களில் தேர்வு எழுதிய 35 பேர் இடம் பெற்றிருந்தது குறித்த ஐயத்தின் அடிப்படையில் விசாரணை நடத்திய போது பெருமளவில் முறைகேடு நடந்தது உறுதி செய்யப்பட்டது.
நில அளவர் தேர்விலும் அத்தகைய முறைகேடுகள் ஏதேனும் நடைபெற்றதா? என்பதை நாட்டுக்கு தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தங்கள் பயிற்சி மையத்தைச் சேர்ந்த 700 தேர்ச்சி பெற்றிருப்பது குறித்து விளக்கம் அளித்த தனியார் பயிற்சி மைய நிறுவனர் கற்பகம், ‘எங்கள் பயிற்சி மையத்தில் 40க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் பணிபுரிகின்றனர். பி.இ சிவில் மாணவர்களுக்கு பிரத்யேகமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பி.இ மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். பி.இ சிவில் மட்டுமன்றி மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்திலும் எங்கள் மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு தேர்விலும் மொத்த பணியிடங்களில் 60 முதல் 65 சதவீதம் மாணவர்கள் எங்கள் பயிற்சி மையத்தை சேர்ந்தவர்கள் தேர்வாகின்றனர். ஒரு முறை மட்டுமே கட்டணம் வாங்குகிறோம். ஓராண்டு பயிற்சிக்கு பிறகு அவர்களுக்கு சீனியர் என்ற ஒரு அடையாள அட்டை கொடுத்தால் அவர்கள் தொடர்ந்து நாங்கள் நடத்தும் தேர்வில் பங்கேற்க அனுமதி அளிக்கிறோம். பெரும்பாலும் கிராமபுறத்தை சேர்ந்த ஏழை மாணவர்களே இங்கு பயில்கின்றனர். காரைக்குடியில் உள்ள சுற்றுப்புற சூழல் இவர்களை படிக்க தூண்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
“டைப்பிங் (Typing) பிரிவில் ஒரு lower ஒரு higher வைத்து இருந்து அதிக மதிப்பெண் பெற்று இருந்தாலும், இரண்டுமே higher வைத்து குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களை விட தர வரிசையில் பின் தங்கி தான் இருப்பார். இது தான் typing rank preference” என அதிகாரிகள் விளக்கம் கொடுத்துள்ளனர்.
மேலும், குரூப் 4 மதிப்பெண் கணக்கீட்டு பணிகள் சாஃப்ட்வேர் மூலம் செய்யப்பட்டு, அதிகாரிகள் மூலமாக நேரடி சரிபார்ப்பும் செய்யப்பட்டுள்ளது. எந்தவிதமான தவறும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் அதிக காலம் எடுத்துக் கொண்டு சரியான முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை.
இதில் ஏதேனும் குளறுபடிகளோ அல்லது தவறோ நடந்து இருப்பதாக தேர்வர்கள் கருதினால் உரிய ஆதாரங்களோடு [email protected] என்ற இமெயில் மூலமாக புகார் தெரிவிக்கலாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நில அளவர் தேர்வில்ஒரே பயிற்சி மையத்திலிருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் 700 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்த இருப்பதாக டி.என்.பி.எஸ்.சி விளக்கமளித்துள்ளது.
அதோடு, குரூப் 4 தேர்வில் 2,000 ஆயிரம் பேர் ஒரே பயிற்சி மையத்தில் படித்து தேர்வாகியுள்ளதாக அந்த பயிற்சி மையம் தெரிவித்துள்ள விவகாரம் குறித்தும் கவனத்தில் எடுத்துக் கொள்ள இருப்பதாக டி.என்.பி.எஸ்சி தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“