தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு தேதிகள் மற்றும் விடுமுறை எப்போது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இதற்காக தீவிரமாக தயாராக வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வருடம் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதாவது காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு என 3 பருவங்களாக பள்ளிகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் இரண்டாம் பருவமான அரையாண்டு தேர்வுக்கான தேதி மற்றும் தேர்வு விடுமுறைக்கான தேதிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற டிசம்பர் 16 ஆம் தேதி திங்கள் கிழமை அரையாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. தொடர்ச்சியாக நடைபெறும் தேர்வுகள் டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
தேர்வுகள் முடிவடைந்ததும் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் அரையாண்டு தேர்வுக்கான விடுமுறைகள் தொடங்குகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளோடு ஜனவரி 1 ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வியாழன் கிழமை பள்ளிகள் மீண்டும் தொடங்கும். அப்போது பள்ளிகளில் மூன்றாம் பருவம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தவகையில் அரையாண்டு தேர்வு விடுமுறையாக மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“