தமிழகத்தில் பள்ளி அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு முதல் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நடப்பு கல்வியாண்டிலும் மாணவர்களுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், இந்தாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு தொடங்கி 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி கலைத் திருவிழா போட்டிகள் பள்ளி அளவில் கடந்த ஆகஸ்ட் 22 முதல் 30 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டன. இவற்றில் பல குரல் பேச்சு, மாறுவேடம், பாடல், நடனம், ஓவியம், கதைக் கூறுதல் உட்பட பல்வேறு போட்டிகளில் லட்சக்கணக்கான மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அடுத்தகட்டமாக வட்டார, மாவட்ட, மாநில அளவிலான போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக பள்ளி அளவில் நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டுமென பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதை பின்பற்றி வெற்றியாளர்கள் விவரங்களை துரிதமாக பதிவேற்றம் செய்து முடிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு கலையரசன், கலையரசி விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படும். மேலும், தரவரிசையில் முதன்மை இடத்தை பெறும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“