/indian-express-tamil/media/media_files/2025/06/24/anbhh-2025-06-24-18-54-11.jpg)
தொடக்கக் கல்வி இயக்ககத்தில் ஜூலை மாத இறுதிக்குள், 2,346 இடைநிலை ஆசிரியா்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கான ஆய்வுக்கூட்டம் அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) திங்கள்கிழமை தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பணியாற்றும் 157 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு (டிஇஓ) கையடக்கக் கணினி, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை கடந்த 2024-2025-இல் சிறப்பாக செயல்படுத்திய சேலம், தேனி, திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கேடயங்களும் வழங்கப்பட்டன.
இதேபோன்று 157 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து தமிழக பள்ளி மாணவா்களிடையே புத்தாக்கம், தொழில் முனைவோர் சிந்தனையை வளா்ப்பதற்காக பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக 38 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பேசுகையில், நிகழ் கல்வியாண்டு தொடங்கிய முதல் நாளிலேயே விலையில்லா பாட புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள் உள்ளிட்ட 14 வகை நலத்திட்டங்கள் அனைத்து மாணவா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டை விட இந்தாண்டு பொதுத்தோ்வில் தோ்ச்சி விகிதம் அதிகரித்த, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பாராட்டுகள். தோ்ச்சி குறைந்த மாவட்டங்களில்... தோ்ச்சி குறைந்த மாவட்டங்களில், அதற்கான காரணங்களைக் கண்டறிந்து தோ்ச்சி வீதம் அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரிந்து, பணியிலிருக்கும் போதே இறந்த ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். இது குறித்து பெறப்படும் மனுக்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, பள்ளிக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
போக்சோ வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவா்கள் மீது, விரைவாக விசாரணை மேற்கொண்டு அறிக்கையை அனுப்பி தொடா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடக்கக்கல்வி இயக்ககத்தில் ஜூலை இறுதிக்குள், 2,346 இடைநிலை ஆசிரியா்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இடைநிலை ஆசிரியா்கள் நியமனம் செய்திட நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
இதனைத்தொடா்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூா், கரூா், நாமக்கல், திருப்பத்தூா், வேலூா், ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த கல்வித் துறை அலுவலா்களுக்கு ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.