சென்னை
முதல்வருடன் ஆலோசனை நடத்திய பிறகே தமிழகத்தில் பொது தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பள்ளி கல்லூரிகளுக்கு காலரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே படித்து வருகின்றனர். மேலும் தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியில், அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் திறக்க மாநில அரசே முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் தமிழகத்தில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ள நிலையில். 9 வகுப்பு முதல் 12-ம் வகுப்புவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் பள்ளிக்கு வரலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
இதில் தனியார் பள்ளிகள் விருப்பப்பட்டால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் அரையாண்டு தேர்வை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டது. அமைச்சரின் இந்த அறிவிப்பால், தமிழகத்தில் பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுமா என்பது குறித்து பெற்றோர்கள் மனதில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, பொதுதேர்வு நடத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்த பிறகே முடிவு செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபியில் பல்வேறு இடங்களில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து கூறுகையில், இந்த கல்வியாண்டில் பொது தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் விரிவான ஆலோசனைக்கு பின்னரே அறிவிக்கப்படும். கொரோனா காலத்தில் காலாண்டு, அரையாண்டு தேர்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கபட்டது. அப்போது உள்ள நிலை வேறு இப்போது உள்ள நிலை வேறு. என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில், ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் நிலவிய நிலையில், தற்போது அமைச்சரின் இந்த தகவலால், தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் உருவாகியுள்ளது.