தமிழகத்தில் திட்டமிட்டவாறு 9 மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கும் நாளை (பிப்ரவரி- 8ம் தேதி) முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தெரிவித்தார்.
மேலும், பள்ளிகளில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தாமதிக்காமல், பிற வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளைத் திறக்க ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில், கடந்த 19ம் முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் மீண்டும் செயல்பட்டு வருகின்றன. பள்ளிகளில் ஒரு வகுப்பறையில் 25 மாணவர்களுக்கு மிகாமல் அமர்ந்திருக்கவும், கோவிட்-19-க்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாகவும், அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக இழந்த நேரத்தை ஈடுசெய்யும் பொருட்டு 10, 11, 12ம் வகுப்பு 2021ஆம் ஆண்டுக்கான பொதுத்தேர்வு பாடத்திட்டத்தில் 40 சதவீத பாடஅளவு குறைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil