ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான அரசின் வழிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு செவ்வாய்க்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு நிலையால், பள்ளியில் மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டிலேயே தரமான கல்வியை வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறையையும் தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. அரசு வெளியிட்ட வழிமுறைகளில் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும், ஆன்லைன் வகுப்புகளில் செய்யும் மதிப்பீடுகள் யாவும் இறுதி மதிப்பெண்களுக்கு எடுத்துக் கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் வாதாடிய கூடுதல் அட்வகேட் ஜெனரல் நர்மதா சம்பத், "1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு, ஒவ்வொரு வகுப்பும் 30-45 நிமிடங்களுக்கு இரண்டு அமர்வுகளுக்கு மிகாமல் இணையம் மூலம் ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ள வேண்டும்" என்று வழிமுறைகளில் தெளிவாக குறிப்படப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஸ்மார்ட்போன் போன்ற டிஜிட்டல் சாதனம் அணுகல் இல்லாத மலைவாழ் மாணவர்களுக்கு முடிந்த வரை அவற்றை அணுக பள்ளிக்கூடங்கள் ஏற்பாடுகள் செய்து வருவதாகவும், தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை, தனியார் தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக, ஆன்லைன் வகுப்புகள் நடக்கும் போது, ஆபாச இணையதளங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க எந்த விதிமுறைகளும் இல்லை என்றும், குழந்தைகளின் கண்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவதாகவும் வழக்கு தொடரப்பட்டது.
மேலும்,"ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான அரசு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிகள், தலைமை கல்வி அதிகாரிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆய்வாளர் உறுதி செய்து வருகின்றனர் என்றும், புகார் அளிக்கப்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கையை உறுதி செய்வார்கள் என்றும் நர்மலா சம்பத் தெரிவித்தார்.
அனைத்து வாதங்களையும் பதிவுசெய்த நீதிமன்றம், ஆபாச இணையதளங்களால் பள்ளி மாணவர்கள் பாதிக்காமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்த நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil